ஆம்பூரில், தனது வீட்டில் கழிப்பறை கட்டித் தர தந்தையிடம் முறையிட்டும் பலனிக்காமல் போனதால் காவல் நிலையம் வரை பிரச்னையை எடுத்துச் சென்று கழிப்பறை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்ட 7 வயது சிறுமி ஹனீஃபா ஜாராவை தூய்மை இந்தியா திட்டத் தூதுவராக ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது.வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி இஷானுல்லா
இவரது மகள் ஹனீஃபா ஜாரா (7). ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வரும் அவர் பள்ளியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று வருகிறார். அவர்களுடைய வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. வீட்டில் கழிப்பறை கட்டித் தருமாறு பலமுறை தன்னுடைய தந்தையிடம் ஹனீஃபா ஜாரா கேட்டு வந்துள்ளார்
பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிப்பறை கட்டித் தருவதாக தந்தை வாக்குறுதி அளித்துள்ளார்
எல்கேஜி முதல் தற்போது பயிலும் 2-ஆம் வகுப்பு வரையிலும் பள்ளியில் அவர் முதலிடம் பிடித்து வந்துள்ளார். எனினும், தந்தை கூறியபடி கழிப்பறை கட்டித் தரவில்லை
திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவது தனக்கு அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வருவதாகவும் தந்தையிடம் ஹனீஃபா ஜாரா கூறி வந்துள்ளார்
இந்நிலையில், தனது தந்தையிடம் கழிப்பறை கட்டித் தருவதாக எழுத்து மூலம் உறுதிமொழி பெற்றுத் தருமாறு கோரி தன் கைப்பட எழுதிய கடிதத்துடன் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தாயாருடன் ஹனீஃபா ஜாரா திங்கள்கிழமை சென்றார். உடனடியாக சிறுமியின் தந்தை காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார்
அத்துடன், ஆம்பூர் நகராட்சிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, கழிப்பறை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது
இந்நிலையில், ஹனீஃபா ஜாராவின் செயலைப் பாராட்டி, அவரை தூய்மை இந்தியா திட்டத்தின் ஆம்பூர் நகராட்சி தூதுவராக, நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி நியமித்துள்ளார்