Type Here to Get Search Results !

ரயிலில் விழுந்து அடிபட்ட இளைஞரை 1.5 கி.மீ. தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள்: குவியும் பாராட்டு



மத்தியப்பிரதேசம், ஹோசங்காபாத் மாவட்டத்தில் ரயிலில் தவறிவிழுந்து காயமடைந்து உயிருக்கு போராடிய இளைஞரை ஒன்றரை கி.மீ. தோளில் சுமந்து காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. காயமடைந்த அந்த இளைஞரை போலீஸ் கான்ஸ்டபிள் காப்பாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது. இதுகுறித்து ஷிவப்பூர் போலீஸ் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி சுனில் படேல் கூறியதாவது: உத்தரப்பிரதேச மாநிலம், பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜித்(வயது35). இவர் போபாலில் இருந்து மும்பை செல்லும் ரயிலில் பயணித்தார். ரயில் நேற்று காலை ரேவன் ரீப்பால் கிராமத்தைக் கடந்து, பாக்தல் ரயில் நிலையத்துக்கு அருகே வந்தபோது, ரயிலில் இருந்து அஜித் தவறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது ரோந்துப்பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் பூனம் பிலோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பூனம் பிலோர் விபத்து நடந்த இடத்துக்குச் சென்றார். ஆனால், ரயில்வே கேட் பகுதியில் இருந்து ஏறக்குறைய ஒன்றரை கி.மீ தொலைவில் அஜித் காயமடைந்திருந்ததால், அந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனம் ஏதும் வரமுடியவில்லை.  இதையடுத்து, உடனடியாக, அஜித்தை மற்றொருவரின் உதவியுடன் தனது தோளில் சுமந்து சென்று ரயில்வே தண்டவாளத்தில் ஒன்றரை கி.மீ நடந்து சென்று, ரயில்வே கேட்டை கடந்து பூனம் பிலோர் மருத்துவமனையில் சேர்த்தார். அந்த இளைஞருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி உயிர் பிழைத்துள்ளார். இவ்வாறு சுனில் படேல் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் கான்ஸ்டபிள் பூனம் பிலோர் கூறுகையில், " ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் அறிந்ததும் அந்த இடத்துக்குச் சென்றேன். அங்குச் சென்றபோது அந்த இளைஞர் பலத்த காயங்களுடன், ரத்தத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அந்த இளைஞர் இருந்த இடத்துக்கும், ரயில்வே கேட் பகுதிக்கும் ஏறக்குறைய 2 கி.மீ தொலைவு இருக்கும். அங்கு ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனம் ஏதும் வர முடியாத பகுதியாகும். உடனடியாக, அந்த நபரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக என் தோளில் சுமந்து கொண்டு ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றேன். ஏறக்குறைய ஒன்றரை கி.மீ நடந்து மருத்துவமனையில் சேர்த்தேன். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால், தற்போது அந்த இளைஞர் உயிர்பிழைத்துவிட்டார் " எனத் தெரிவித்தார். உயிருக்கு போராடிய இளைஞரை தோளில் சுமந்து ஒன்றரை கி.மீ நடந்த போலீஸ் கான்ஸ்டபிள் பூனம் போலோருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. போலீஸ் உயரதிகாரிகளும் பூனம் பிலோருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.


Top Post Ad

Below Post Ad