Type Here to Get Search Results !

இனி ஒவ்வொரு ஆதார் KYC-க்கும் 20 ரூபாய்... புதிய விதிமுறைகள் இதோ!






 





கடந்த வருடம் ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர் சரிபார்ப்புக்காக (e-KYC) ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதற்கு தடைவிதித்தது.


 சட்டத்தில் அதற்கு இடமில்லை எனச் சொன்னது நீதிமன்றம். இதனால் தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை வைத்து வாடிக்கையாளர்களை சரிபார்ப்பதில் சிக்கல் எழுந்தது.


இதைத் தொடர்ந்து அண்மையில் நாடாளுமன்றத்தில் அவசரச்சட்டம் ஒன்றை இயற்றி, தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியது மத்திய அரசு.


இந்நிலையில், தற்போது இதுதொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஆதார் ஆணையம்

இனிமேல் வாடிக்கையாளர் சரிபார்ப்பிற்காக ஆதார் வசதியைப் பயன்படுத்தினால் அதற்கு 20 ரூபாயும் (வரி உட்பட), Yes or No வகை சரிபார்ப்பிற்காக பயன்படுத்தினால் 50 பைசாவும் கட்டணமாகச் செலுத்தவேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. KYC சரிபார்ப்பு என்பது ஆதார் எண் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்வது.


 இதற்கு உதாரணம் சிம் கார்டு நிறுவனங்கள். வெறுமனே நம்முடைய ஆதார் எண்ணை மட்டும் அவர்களிடம் கொடுத்தாலே போதும்.


 அதிலிருந்தே நம்முடைய தகவல்களைப் பெற்று, நம்முடைய பயோமெட்ரிக் ஐடி மூலம் அதை உறுதிசெய்துகொள்வார்கள்.


இதுவே பழைய KYC முறை என்றால், வாடிக்கையாளர்களின் தகவல்களை விண்ணப்பம் மூலம் பெற்றுக்கொண்டு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை அரசு ஆவணங்கள் மூலம் சரிபார்த்து பின்னரே சிம் கார்டை ஆக்டிவேட் செய்வார்கள்.


இதில் விண்ணப்பங்கள் பெறுவது, ஆவணங்கள் சரிபார்ப்பு போன்ற விஷயங்கள் இருப்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் நிறுவன பணியாளர்களை இதில் நேரடியாக ஈடுபடுத்தாமல், அவுட்சோர்சிங் செய்துவிடுவார்கள்.


 இதனால் சம்பந்தம்பட்ட நிறுவனங்களுக்கு ஒவ்வொரு KYC-க்கும் குறைந்தது 100 ரூபாயாவது செலவாகும். இதுவே ஆதார் சரிபார்ப்பு என்றால் இந்த செலவு மிச்சம்.


இதற்குப் பதிலாக ஆதார் சரிபார்ப்பு செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மட்டும் ஏற்படுத்தினால் போதும்.இதேபோல Yes or No authentication-க்கு உதாரணம், வருமானவரி இணையதளத்தைக் குறிப்பிடலாம்.


 ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்துவிட்டு, அதை நாம்தான் செய்தோம் என உறுதிசெய்யும் வகையில் அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து கையெழுத்திட்டு வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்.


 இதெல்லாம் ஆதார் வருவதற்கு முன்பு. இப்போது நம்முடைய ஆதார் எண் கொடுத்து, மொபைல் OTP மூலம் உறுதிப்படுத்திவிட்டால் போதும். உடனே e-verification முடிந்தது.


 இதேபோல அரசு ஆவணங்களுக்காக விண்ணப்பிக்கும் பல இடங்களில் வெறுமனே ஆதார் எண் மூலமாகவே எளிதில் விண்ணப்பித்துவிடலாம். தற்போது இந்த வசதிக்குத்தான் 50 பைசா கட்டணம் நிர்ணயித்துள்ளது ஆதார் ஆணையம்.


 தற்போது புதிதாக கட்டணம் வசூலிக்கப்பட்டாலுமேகூட இதற்கு முன்பு தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர் சரிபார்ப்பிற்காக செலவு செய்ததைவிடவும் மிகக்குறைவான தொகையே இப்போதும் செலவாகும் என்கிறது


இந்தக் கட்டண விதிமுறைகளிலிருந்து அரசு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு (தபால் நிலையங்கள், பாஸ்போர்ட் அலுவலகங்கள், வருமான வரித்துறை போன்றவை) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


 அதேபோல ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்காக ஆதார் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் வங்கிகளுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்கள் மட்டும் விதிமுறைப்படி கட்டணம் செலுத்தவேண்டும்.


 ஒரு நிறுவனம் வாடிக்கையாளர் சரிபார்ப்பிற்காக ஆதார் KYC வசதியைப் பயன்படுத்தினால் உடனே அதற்கான கட்டண ரசீது UIDAI-யால் தயாரிக்கப்பட்டுச் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பப்படும்.


 அந்நிறுவனம் அடுத்த 15 நாள்களுக்கும் அந்தத் தொகையை செலுத்தவேண்டும்.செலுத்தத் தவறும்பட்சத்தில் அந்தத் தொகையுடன் மாதத்திற்கு 1.5 சதவீத வட்டியும் இணைத்துச் செலுத்தவேண்டியிருக்கும். இல்லையெனில் ஆதார் KYC-யை தொடர்ந்து பயன்படுத்த முடியாது.


இந்தக் கட்டணம் செலுத்த விரும்பாத நிறுவனங்கள் உடனடியாக UIDAI-யிடம் தகவல் தெரிவித்துவிட்டு, ஆதார் KYC அனுமதிக்காகப் பெறப்பட்ட சிறப்பு வசதிகளைத் திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும்.


 அதன்பின்னர் ஆதார் KYC பயன்படுத்தும் வசதியிலிருந்து அந்நிறுவனம் முழுமையாக வெளியேறிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad