Type Here to Get Search Results !

சந்திரயான்-2 ஏவும் திட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு: விண்ணில் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்


மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் திட்டம், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. ராக்கெட் ஏவப்படும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.


ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, 4,000 கிலோ எடையைத் தாங்கிச் செல்லும் இந்தியாவின் மிகுந்த சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் திங்கள்கிழமை (ஜூலை 15) அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது.


இதுவரை எந்த நாடும் செல்லாத, நிலவின் தென்துருவத்துக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள இருப்பதாலும், அமெரிக்கா, ரஷியா, சீன நாடுகளுக்கு அடுத்தப்படியாக நிலவின் பரப்பில் விண்கலத்தை மெதுவாகத் தரையிறக்கும் முயற்சியை முதன்முறையாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளதாலும் சந்திரயான்-2 திட்டம் இந்திய மக்களிடையே மட்டுமின்றி உலக நாடுகளிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.


இந்தச் சூழலில் ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட்-டவுனை ஞாயிற்றுக்கிழமை காலை 6.51 மணிக்கு இஸ்ரோ தொடங்கியது. ராக்கெட் ஏவுவதை நேரில் காண ஏராளமான பொதுமக்களும், வழக்கத்துக்கு மாறாக மும்பை, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான செய்தியாளர்களும் சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் நள்ளிரவில் குவிந்திருந்தனர்.


ராக்கெட் ஏவுவதற்கான கவுன்ட்-டவுன் தொடர்ந்து எண்ணப்பட்டு வந்த நிலையில், ராக்கெட் ஏவுவதற்கு 56 நிமிடங்கள் 24 விநாடிகள் இருக்கும்போது, கவுன்ட்-டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. உடனடியாக, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, விண்வெளி ஆய்வு மைய ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது.


இந்த அறிவிப்பு வந்த அரை மணி நேரத்தில், ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான்-2 விண்ணுக்கு அனுப்பும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், ராக்கெட் ஏவும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிவிப்பை, இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் குருபிரசாத் வாசித்தார். அதன் பின்னர், இஸ்ரோ வலைதளத்திலும் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ராக்கெட் ஏவுவது கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது, அங்கிருந்தவர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.


எரிபொருள் கசிவே காரணம்!: விண்ணுக்கு செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் ராக்கெட்டுகளில், கடைசி சில மணி நேரங்களுக்கு முன்பாகத்தான் எரிபொருள் நிரப்பப்படுவது வழக்கம். அந்த வகையில், சந்திரயான்-2 விண்கலத்தை ஏந்திச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில், கடைசி சில மணி நேரங்களுக்கு முன்பாக திட மற்றும் திரவ எரிபொருளை விஞ்ஞானிகள் நிரப்பினர். ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், ஹீலியம் ஆகிய திரவ எரிபொருள்கள் நிரப்பப்பட்டன.


எரிபொருள் நிரப்பப்பட்ட ஒரு சில நிமிடங்களில், அதாவது ராக்கெட் ஏவுவதற்கு 56 நிமிடங்கள் 24 விநாடிகள் இருக்கும்போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டு, ராக்கெட் ஏவுவதும் நிறுத்தப்பட்டது.


ராக்கெட்டில் ஹீலியம் எரிபொருள் கசிவுதான், கடைசி நேர ஒத்திவைப்புக்குக் காரணம். கசிவை சரிசெய்யாமல் ஏவினால், ராக்கெட் வெடித்து சிதறும் அபாயமும் உள்ளது. கடைசி நேரத்தில் கசிவைச் சரிசெய்ய முடியாததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஞ்ஞானிகள் அதனை விண்ணில் ஏவும் திட்டத்தை நிறுத்திவைத்தனர்.


இதற்கு முன்பாக 2008-இல் சந்திரயான்-1 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக ராக்கெட்டில் எரிபொருள் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கசிவு உடனடியாக சரிசெய்யப்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.


அதுபோல, சந்திரயான்-2 விண்கலத்திலும் கசிவை உடனடியாக சரிசெய்ய விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.


இப்போது, ராக்கெட்டில் நிரப்பப்பட்ட எரிபொருள்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு கசிவுக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்குத் தீர்வுகாண குறைந்தபட்சம் ஒரு மாதம் வரை ஆகவும் வாய்ப்புள்ளது. அதன் பிறகே எந்தத் தேதியில் மீண்டும் சந்திரயான்-2 விண்கலத்தை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்புவது என்பது முடிவு செய்யப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


பெரும் இழப்பு தவிர்ப்பு


சந்திரயான்-2 திட்டத்துக்கு மொத்தம் ரூ. 978 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டுக்கு ரூ. 375 கோடியும், விண்கலத்தில் இடம்பெற்றிருக்கும் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் விண்கலங்கள் மற்றும் இவற்றில் இணைக்கப்பட்டிருக்கும் நவீன கருவிகளுக்கு ரூ. 603 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. எனவே, கடைசி நேரத்தில் இந்த தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு, ராக்கெட் ஏவுவது நிறுத்திவைக்கப்பட்டதால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது.

Top Post Ad

Below Post Ad