Type Here to Get Search Results !

அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை. உயர்நீதிமன்றம் உத்தரவு

'2-வது திருமணம் செய்தால்..!' - அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் வைத்த 'செக்'*


அரசுப் பணிகளில் இருப்போர், 2வது திருமணம் செய்ததாகப் புகார்கள் எழுந்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுத்து குற்ற வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.


உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மதுரையைச் சேர்ந்த தேன்மொழி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,``என் கணவருடன் எனக்கு 1982-ல் திருமணமானது. அப்போது காவலராக இருந்து அவர் எஸ்.ஐ-யாகப் பணி உயர்வு பெற்றிருந்தார். ஆனால், அவருக்கு ஏற்கெனவே முத்துலெட்சு என்ற பெண்ணுடன் திருமணமான விஷயம் எனக்குத் தெரியாது.


ஏற்கெனவே திருமணம் நடந்து, குழந்தைகள் இருந்தது பின்னர் தெரியவரவும் அவர் மீது உசிலம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். சமரசத் தீர்வு மையம் மூலமாக, இரு குடும்பத்தையும் கவனித்துக்கொள்வதாக என் கணவர் தெரிவித்தார்.


இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன் என் கணவர் இறந்துவிட்டார். ஆனால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் எனக்கு வழங்கப்படவில்லை. எனவே, அவற்றில் எனக்கும் பங்கு வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இது போன்ற விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக அரசு ஓய்வூதிய விதிப்படி குடும்ப ஓய்வூதியத்தை தன் மனைவிக்கு வழங்க பரிந்துரைக்கலாம். ஒருமுறை பதிவு செய்த பின் மனைவி இறந்தால் தவிர, வேறு காரணங்களுக்காக இதில் மாற்றம் செய்ய இயலாது. ஆகையால், இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது.


தமிழக நிர்வாகத்துறை செயலர், ஓய்வூதியத்துக்காக மனைவி பெயரை பரிந்துரைக்கும் ஆவணங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அரசுப் பணியில் இருப்போர் இரண்டாவது திருமணம் செய்தது தொடர்பான புகார்கள் எழுந்தால், துறைரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார் .

Top Post Ad

Below Post Ad