உடனடிக் குறுஞ்செய்திகளை அனுப்ப/பெறக் கூடிய செயலிகளில் வாட்ஸ்ஆப்தான் உலகிலேயே நம்பர் 1 என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
அந்த வாட்ஸ்ஆப் செயலியை பிரபல ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் வாங்கிய விஷயமும் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.
இதையடுத்து, ஃபேஸ்புக் பயன்பாடுகள் சிலவற்றை வாட்ஸ்ஆப்பிலும், சில வாட்ஸ்ஆப் பயன்பாடுகளை ஃபேஸ்புக்கிலும் பயன்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்து, அதற்கான செயல்பாடுகளில் இறங்கியுள்ளது.
'ஃபேஸ்புக்கிலிருந்து வாட்ஸ்ஆப்' என்ற இந்தப் பயன்பாட்டை அந்தச் செயலிகளின் செட்டிங்ஸ் பக்கத்தில் காண முடியும்.
தவிர, வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் உள்ளிட்ட சில விஷயங்களை இனி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள முடியும்.
ஃபேஸ்புக்கிலிருந்து இன்ஸ்டாகிராம்' என்ற பயன்பாட்டை ஃபேஸ்புக் ஏற்கனவே தொடங்கியுள்ளது. மேலும், மெஸஞ்சர், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை ஏற்கனவே ஒருவகையில் இணைத்திருக்கிறார் ஃபேஸ்புக்கின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க்.
இந்த 3 செயலிகளும் எப்போதும்போல் தனித்தனியாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், பயனர்களின் பாதுகாப்பு குறித்து சில சந்தேகங்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கிடையே, குறைந்தது 13 வயதுடையவர்கள் (ஐரோப்பாவில் 16 வயது) மட்டுமே வாட்ஸ்ஆப் பயனாளர்களாக இருக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விதியை மீறுவோரின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இருப்பினும், பயனர்களின் வயது வரம்பை வாட்ஸ்ஆப் எப்படிக் கணித்தறியப் போகிறது என்பது குறித்து எதுவும் தெரியவில்லை