Type Here to Get Search Results !

ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது குறைப்பு - ரிசர்வ் வங்கி நடவடிக்கை*



கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கூறினார். அவற்றுக்கு பதிலாக, புதிதாக ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அந்த ரூ.2,000 நோட்டுகள் தற்போதும் புழக்கத்தில் உள்ளன. ஆனால், சமீபகாலமாக ரூ.2,000 நோட்டுகள் நடமாட்டம் குறைவாக உள்ளது. இதற்கு அந்த நோட்டுகள் அச்சடிப்பது குறைக்கப்பட்டிருப்பதே காரணம் என்று தெரிய வந்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, பெரிய மதிப்புள்ள நோட்டுகளின் தட்டுப்பாட்டை போக்க ரூ.2,000 நோட்டுகள் அதிக அளவில் அச்சிடப்பட்டன. கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம், பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகள் முழுமையாக திரும்பப்பெற்றபோது, புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பில் பாதி அளவுக்கு ரூ.2,000 நோட்டுகளே இருந்தன.

ஆனால், மறு ஆண்டில் இருந்தே அதன் பங்கு குறைந்து வருகிறது. 2018-ம் ஆண்டில், மொத்த நோட்டுகளில் ரூ.2,000 நோட்டுகளின் பங்கு 37 சதவீதமாக குறைந்தது. நடப்பு ஆண்டில், அதன் பங்கு இன்னும் குறைந்து 31 சதவீதமாக உள்ளது.

ரூ.2,000 நோட்டுகள் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 336 கோடியே 20 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு, 7 கோடியே 20 லட்சம் எண்ணிக்கை குறைந்து, 329 கோடியாக ஆகிவிட்டது.

அந்த நோட்டுகளை அச்சடிக்க ‘ஆர்டர்’ கொடுப்பதை ரிசர்வ் வங்கி குறைத்து விட்டதே இதற்கு காரணம். அதிக மதிப்பு கொண்ட நோட்டு என்பதால், அது பதுக்கலுக்கும், கள்ள நோட்டுகள் அச்சடிப்பதற்கும் வழி வகுக்கிறது. அதை தடுக்கவே அந்த நோட்டுகள் அச்சடிப்பை ரிசர்வ் வங்கி குறைத்து விட்டதாக தெரிகிறது.

அதே சமயத்தில், மற்ற நோட்டுகளின் மீது ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தி வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில், புழக்கத்தில் உள்ள மற்ற ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ரூ.21 லட்சத்து 10 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

அவற்றில் ரூ.500 நோட்டுகளின் பங்கு 51 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதன் எண்ணிக்கை 2 ஆயிரத்து 151 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டுகளில், ரூ.500 நோட்டுகள், 588 கோடி மற்றும் 1,547 கோடி எண்ணிக்கையில்தான் இருந்தன.

ரூ.10 நோட்டுகள் அதிக அளவாக, 3 ஆயிரத்து 128 கோடி எண்ணிக்கையில் உள்ளன. ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகள் சேர்ந்து, மொத்த நோட்டுகளில் 47.2 சதவீதமாக உள்ளன. கடந்த ஆண்டு இந்த நோட்டுகள் 51.6 சதவீதமாக இருந்தன.

நாணயங்களை பொறுத்தவரை, ரூ.1, ரூ.2 மற்றும் ரூ.5 நாணயங்கள் சேர்ந்து, மொத்த நாணய எண்ணிக்கையில் 83.6 சதவீதம் உள்ளன.

Top Post Ad

Below Post Ad