நிலாவினை முதல் முறையாக புகைப்படம் எடுத்து சந்திரயான் 2 விண்கலம் அனுப்பி உள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ரூ.978 கோடி செலவில் சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்பியது.இந்த விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீகரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்பியது. இந்த சந்திரயான் 2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்டது. இந்த விண்கலம் செப்டம்பர் 7ம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிரங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திராயன் 2 விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பிய பிறகு அதை ஒவ்வொரு சுற்றாக 5 புவி வட்டப்பாதையிலும் நகர்த்தினர். அதன்பின்னர் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கும் அண்மையில் மாற்றினர். தற்போது சந்திரயான் 2 விண்கலம் முதல்முறையாக நிலவின் புகைப்படத்தை எடுத்து அனுப்பி வைத்துள்ளது. இந்த புகைப்படம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 2650 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டரால் நேற்று எடுக்கப்பட்டுள்ளது