Type Here to Get Search Results !

இன்று காவலர் எழுத்துத் தேர்வு: தமிழகம் முழுவதும் 3.22 லட்சம் பேர் எழுதுகின்றனர்




தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.25) நடைபெறும் எழுத்துத் தேர்வை 40 ஆயிரம் பெண்கள்,20 திருநங்கைகள் உள்பட 3.22 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

தமிழக காவல்துறையின் ஆயுதப்படையில் உள்ள 2465, தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் உள்ள 5963 ஆகிய இரண்டாம் நிலைக் காவலர்கள் பணியிடங்கள், தீயணைப்புத்துறையில் 191 தீயணைப்போர் பணியிடம், சிறைத்துறையில் உள்ள 208 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடம் என மொத்தம் 8,826 பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி ஆகஸ்ட் 25-ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இந்த எழுத்துத் தேர்வுக்குரிய, தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு கடந்த 13-ஆம் தேதி தேர்வுக் குழுமத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

3.22 லட்சம் பேர்: இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 228 மையங்களில் 3.22 லட்சம் பேர் எழுதுகின்றனர். இங்கு 40 ஆயிரம் பெண்களும், 20 திருநங்கைகளும் தேர்வை எழுதுகின்றனர்.

சென்னையில் இத் தேர்வை 20 ஆயிரம் பேர் 14 மையங்களில் எழுதுகின்றனர். மேலும் 10 திருநங்கைகளும் இங்கு தேர்வு எழுதுகின்றனர்.

வேலூரில் அதிகம்: அதிகபட்சமாக வேலூரில் 28 ஆயிரம் பேரும், மதுரையில் 25 ஆயிரம் பேரும், விழுப்புரத்தில் 21 ஆயிரம் பேரும்,திருநெல்வேலியில் 21 ஆயிரம் பேரும் இத் தேர்வை எழுதுகின்றனர். தேர்வில் பங்கேற்பவர்கள் காலை 9 மணிக்கு தேர்வுக்குக் கூடத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல தேர்வை நடத்தும் காவல்துறை அதிகாரிகள் காலை 7 மணிக்குள் தேர்வுக் கூடத்துக்குள் கண்டிப்பாக வந்துவிட வேண்டும் என தேர்வுக் குழும அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி 11.20 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு எழுதும் இளைஞர்களின் வசதிக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தேர்வுக் கூடத்துக்கு காவல்துறையின் சார்பில் பலத்த பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான ஏற்பாடுகளை தேர்வுக் குழுமத்தின் (பொறுப்பு) டிஜிபி கரண்சின்ஹா, ஏடிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் செய்துள்ளனர்.

Top Post Ad

Below Post Ad