தமிழ்நாட்டில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் பால் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என்று அரசு அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று அனைத்து ரக ஆவின் பால் பாக்கெட்டுகளும் விலை உயர்ந்துள்ளது. இதுவரை ரூ.22.50 க்கு விற்பனை செய்யப்பட்ட இளஞ்சிவப்பு நிற பிரிமியம் பால் பாக்கெட் இன்று முதல் ரூ. 25.50க்கு விற்பனை செய்யப்பட்டது. (அட்டைதாரர்களுக்கு ரூ.24.50)
ரூ.20.50 க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை நிற கிரீன்மேஜிக் பால் பாக்கெட் இன்று ரூ.23.50 க்கு விற்கப்பட்டது. (அட்டைதாரர்களுக்கு ரூ.22.50)
ரூ.18க்கு விற்பனை செய்யப்பட்ட நீல நிற ‘நைஸ்’ பால் பாக்கெட் ரூ.21க்கு விலை உயர்ந்துள்ளது. (அட்டைதாரர்களுக்கு ரூ.20).
இதுவரை ரூ.17க்கு விற்பனை செய்யப்பட்ட டயட் பால் பாக்கெட் இப்போது ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது (மாத சந்தா அட்டைதாரர்களுக்கு ரூ.19.50)
பால் விலை ரூ.6 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மாதாந்திர பால் அட்டை வைத்திருப்பவர்கள் இனி மாதந்தோறும் லிட்டருக்கு கூடுதலாக ரூ.180 கட்ட வேண்டும்.
பால் விலை உயர்த்தப்பட்டதால் பாக்கெட் பால் வாங்குபவர்கள் கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பல இடங்களில் காண முடிந்தது. சில கடைகளில் ஆவின் பாலுக்கு பதிலாக தனியார் பாக்கெட் பால்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
ஆவின் பால் விலை உயர்வைத் தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதேபோல் டீ கடைக்காரர்களும், டீ, காபி விலையை விரைவில் உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆவின் பாலகங்களில் ஒரு கிலோ நெய் ரூ.460க்கு விற்பனையாகி வருகிறது. வெண்ணெய் அரைகிலோ ரூ.220 க்கு விற்கப்படுகிறது.
இந்த விலையில் இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை விரைவில் நெய், வெண்ணெய், பால் பவுடர் விலை உயரும் என தெரிகிறது. இதுபற்றி ஆவின் அதிகாரிகள் விரைவில் விலையை முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று ஆவின் ஊழியர்கள் தெரிவித்தனர்.