சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து, 60 மாணவர்கள் பார்வையிட உள்ளனர்.நிலவின் தெற்கு பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22ல் சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. செப்., 02ம் தேதி, விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டு, தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் நிலவை நெருங்கி சுற்றி வருகிறது. செப்., 07 நள்ளிரவு 1.30 முதல் 2.30 மணியளவில் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்க உள்ளது. இதனை பிரதமர் மோடி நேரில் பார்வையிடுகிறார். அவருடன் சேர்ந்து பார்வையிட விருப்பமுள்ள 8 முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக இஸ்ரோ சார்பில் இணையதளம் வழியாக ஆக. 10 முதல் ஆக. 25 வரை வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மொத்தம் 10 நிமிடங்களில் 20 கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் முதலிரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இஸ்ரோ மையத்தில், பிரதமர் மோடியுடன் சேர்ந்து சந்திரயான் 2 தரையிறங்குவதை பார்வையிடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.