வங்கிகள் இணைப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் முதல்கட்டமாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அதிகாரிகள் சங்கம் உள்பட 4 சங்கங்கள் வருகிற 26, 27ம் தேதிகளில் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்காக அவர்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 3 லட்சத்துக்கும் அதிகமான வங்கி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் வங்கி சேவை 2 நாட்கள் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அன்றைய தினம் வங்கிகள் திறந்திருந்தாலும், ஊழியர்கள் இருந்தாலும் வங்கி பணிகள் எதுவும் நடைபெறாது என்று கூறப்படுகிறது.
ஏனென்றால், வங்கியின் லாக்கர் சாவி, பணம் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருக்கும். அதே நேரத்தில் செக்கில் அதிக பணம் எடுத்தால் வங்கி அதிகாரிகள் கையெழுத்து போடுவது வழக்கம்.
இதனால் அவர்கள் வராவிட்டால் வங்கிகளில் எந்த பணிகளும் நடைபெறாது. எனவே, 2 நாட்களும் பண பரிவர்த்தனை, செக் பரிவர்த்தனை உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெற வாய்ப்பில்லை. வங்கி அதிகாரிகளின் 2 நாட்கள் ஸ்டிரைக்கிற்கு பிறகு 28ம் தேதி சனிக்கிழமை. வாரத்தில் 4வது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் விடுமுறை. மறுநாள் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை. இதனால் 4 நாட்கள் தொடர்ச்சியாக வங்கிகள் செயல்படாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, வங்கி சேவை அடியோடு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், பெரும்பாலான வங்கிகளுடன் ஏடிஎம்கள் செயல்பட்டு வருவதால் அதன் சேவையும் கடுமையாக பாதிக்கும்.
இந்த ஏடிஎம்களில் வங்கிகள் மூலம்தான் பணத்தை நிரப்புவது வழக்கம். சென்னை போன்ற பெரிய நகரங்களில் தினந்தோறும் ஏடிஎம்களில் பணம் நிரப்பப்பட்டு வருகிறது. ஒரு நாள் விடுமுறை என்றாலே ஏடிஎம்களில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. ஏடிஎம்கள் முன்பாக 'நோ கேஸ்' என்று போடப்படும் நிலை உள்ளது. இப்படி தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகள் செயல்படாததால் ஏடிஎம் சேவையும் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.