Type Here to Get Search Results !

சூரியனை மிக அருகில் ஆராயவுள்ள ஐரோப்பிய விண்கலம் - விரிவான தகவல்கள்


இதுவரை எடுக்கப்பட்டதிலேயே, சூரியனை மிகவும் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஐரோப்பிய விண்கலம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





சோலார் ஆர்பிட்டர் அல்லது சோலோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், தன்னை புதன் கோளின் சுற்றுவட்ட பாதையினுள் நிறுத்திக்கொண்டு, அங்கிருந்து சூரியனின் பரப்பை ஆய்வு செய்ய தனது தொலைநோக்கியைத் திருப்பும்.





இதிலுள்ள பிற கருவிகள், சூரியனிலிருந்து வெளியேறும் துகள்கள் மற்றும் அவற்றின் காந்தபுலம் ஆகியவற்றை கவனிக்கும்.





இந்த விரிவான ஆய்வு சூரியனின் செயல்பாட்டை நன்கு புரிந்துகொள்ள உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.





இந்த செயல்பாடு 11 ஆண்டு சுழற்சியில்.





பலரின் கவனத்தையும் ஈர்க்கும் இதுஒரு ஆய்வு மட்டுமல்ல, புவியில் வாழும் அனைவருக்கும் நேரடியான தொடர்பை ஏற்படுத்தக்கூய ஒன்றாகும்.





சூரியனில் இருந்து வெளியாகும் திடீர் ஆற்றல் சீற்றங்கள், செயற்கைக் கோள்களை சேதப்படுத்தும், விண்வெளி வீரர்களுக்கு தீங்கு விளைவிக்கும், மின் தொடர்களை செயலிழக்க வைக்கும் வலிமையுள்ளவை.





''அறிவை வளர்த்துக்கொள்ளமட்டும் இதனை நாம் செய்யவில்லை. சூரியப் புயல்கள் வெளியாகும்போது செயற்கைக் கோள்களை பாதுகாப்பு நிலைக்குத் திருப்பவும், அது போன்ற நேரத்தில் விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தைவிட்டு வெளியேறாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும் இந்த ஆராய்ச்சி உதவும் '' என சோலோ ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானி டானியல் முல்லர் கூறினார்.





1.5 பில்லியன் யூரோ மதிப்புள்ள இந்த ஆய்வில் பிரிட்டன் 220 மில்லியன் யூரோ முதலீடு செய்துள்ளது.





இது, அட்லஸ் ஏவுகணையுடன் இணைப்பதற்காக ஃபுளோரிடாவுக்கு அனுப்பப்படும், பிறகு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் சூரியனை நோக்கி விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





கிட்டத்தட்ட 600 டிகிரி வெப்பநிலையை சோலோ எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டைட்டானியம் கவசத்தின் உதவியோடும், மிகவும் சிக்கலான தொழில்நுட்பத்தில் இயங்கும் ரேடியேட்டர்கள் மூலம் தம்மை குளிர்வித்துக்கொண்டும் இந்த வெப்பநிலையை சோலோ எதிர்கொள்ளும்.





எந்த தொழில்நுட்ப கோளாறாக இருந்தாலும் இந்த விண்கலம் 50 விநாடிகளுக்குள் சீர்படுத்திக்கொண்டு இயல்புநிலைக்கு திரும்பிவிடவேண்டும் என்பது எங்கள் தேவை. ஆனால் 22 விநாடிகளில் தானாகவே சரி செய்துகொள்ளும் வகையில் சோலோ உருவாக்கப்பட்டுள்ளது என இந்த விண்கலத்தின் பாகங்களைப் பொருத்தும் பணியை ஏற்றுள்ள ஏர் பஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் இயன் வால்டர்ஸ் உறுதியளிக்கிறார்.





வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள டைட்டானியம் கவசத்துக்குப் பின்னால் பொருத்தப்பட்டிருந்தாலும், இந்த விண்கலம் சூரியனை நோக்கவேண்டும் என்பதற்காக, இந்தக் கவசத்தில் சிறு சிறு நோக்குத் துளைகள் இடப்பட்டிருக்கும்.





சோலா மூலம் பதிவு செய்யப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளியில் மிக சிறந்த படத் தெளிவு (PICTURE RESOLUTION ) இருக்கும். 70 கிலோ மீட்டர் அளவுள்ள பொருள்களைக்கூட இதனால் பார்க்க முடியும்.





''இது ஆச்சரியமானது, அதிகத் தெளிவுள்ள படங்களைப் பெற பெற அதிக தகவல்களைப் பெற முடியும் '' என அமெரிக்க விண்வெளி அமைப்பின் சோலோ திட்டத்தின் துணை விஞ்ஞானி ஹோலி கில்பர்ட் கூறினார்.





சோலோ சூரியனின் துருவப் பகுதிகளையும் முதன் முறையாக மிக நெருக்கத்தில் புகைப்படம் எடுக்கவுள்ளது. இந்த துருவப் பகுதிகளே, அதிக காந்தப்புலம் இருக்கும் இடங்களாகவும், துகள்கள் மிக வேகமாக வெளியேறும் இடங்களாகவும் அறியப்படுகின்றன.





"இந்த விண்கலன்களை இணைப்பதன் மூலம் நம்ப முடியாத அளவிலான விஞ்ஞான தகவல்களை நாம் பெற முடியும். அதற்கான முக்கிய வாய்ப்பு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரும்" என்று பிபிசியிடம் தெரிவித்தார், லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் டிம் ஹார்பரி.




Top Post Ad

Below Post Ad