வீட்டுக்கே வந்து வங்கிச்சேவைகளை வழங்க பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளன. முதல் கட்டமாக, மூத்த குடிமகன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தச் சேவை அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
மூத்த குடிமகன்களுக்கு வங்கிச்சேவைகளை வீட்டுக்கே சென்று வழங்குவதற்கான ஏற்பாடுகளை வங்கிகள் செய்ய வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன்பே ரிசர்வ் வங்கி பரிந்துரைத்திருந்தது.
பொதுவான ஒரு ஏஜென்சி மூலம் இதை நடத்தலாம் எனவும் கூறியிருந்தது. இந்நிலையில், மேற்கண்ட சேவையை வழங்குவதற்கு முன்வருமாறு தனியார் துறையினருக்கு யூகோ வங்கி கோரியுள்ளது. தேர்வு செய்யப்படும் ஏஜென்சி அல்லது அமைப்பு மூலம் அனைத்து பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இந்த சேவை கிடைக்கும் என கூறப்படுகிறது.
என்னென்ன சேவைகள்?: வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்வது, எடுப்பது, செக், டிடியை வங்கியில் டெபாசிட் செய்வது, கணக்கு பட்டியல் கோருதல், புதிய செக் புத்தகம் கோருதல், டிடி, டெர்ம் டெபாசிட், செக் புத்தகம் வீட்டுக்கு வரவழைத்தல், பிக்சட் டெபாசிட் மீதான டிடிஎஸ் பிடித்தம் விலக்கு பெற 15ஜி, 15 எச் படிவம் பெறுதல், வருமான வரி சலான், டிடிஎஸ் படிவம் 16 பெறுதல், கிப்ட் கார்ட் போன்றவற்றை பெறுதல் ஆகிய சேவைகள் வழங்கப்படும் என வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சேவையை வழங்க தேர்வு செய்யப்படும் நிறுவனம், கால் சென்டர், மொபைல் ஆப்ஸ் மற்றும் இணைய தளம் மூலம் சேவை வழங்க வேண்டும். முதல் கட்டமாக இந்த சேவை மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு மற்ற வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்றனர்.