Type Here to Get Search Results !

தீபாவளி லேகியம் செய்யும் எளிய முறை

தீபாவளி அன்று சாப்பிடும் எண்ணெய்ப் பலகாரங்களும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இத்தகைய பாதிப்புகளில் இருந்து உடலை மீட்கும் ஒரு அருமருந்து தான் தீபாவளி லேகியம்.


சாதாரண தலைவலி, காய்ச்சலில் தொடங்கி, அஜீரணம், அசதி வரை அனைத்துப் பிரச்னைகளையும் குணப்படுத்தி,உடலை லேசாக்கக் கூடிய தீபாவளி லேகியத்தை நம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்:


கொத்தமல்லி (தனியா) - 2 டீஸ்பூன், ஓமம் - 2 டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம்- 1 டீஸ்பூன், மஞ்சள் - அரை இன்ச், சுக்கு - சிறுதுண்டு, சிற்றரத்தை - சிறு துண்டு, கண்டந்திப்பிலி - சிறுதுண்டு, அரிசி திப்பிலி - 8 துண்டுகள், நெய் - 4 டேபிள் ஸ்பூன், தேன் - தேவையான அளவு, நாட்டு வெல்லம் - 1 கப் (பொடித்தது).


செய்முறை :


நெய், தேன் தவிர்த்த மருந்துப் பொருட்கள் ஒவ்வொன்றையும் அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு லேசாக வறுத்துக்கொள்ளுங்கள்.


ஆறியதும் நன்றாக அரைத்துப் பொடியாக்கிக்கொள்ளுங்கள்.


வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கரைத்து, வடிகட்டுங்கள். அதை கம்பிப் பாகு பதத்துக்குக் காய்ச்சுங்கள்.


பொடித்துவைத்த மருந்தை வாணலியில் போட்டு, மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி, இரண்டு நிமிடம் கொதிக்கவையுங்கள்.


அதில் வெல்லப்பாகைச் சேர்த்துக் கைவிடாமல் கிளறுங்கள். நெய்யைக் கொஞ்சம், கொஞ்சமாகச் சேர்த்து லேகியம் நல்ல பதத்துக்கு வரும்போது, தேன் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள்.


குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த லேகியத்தை எடுத்துக் கொள்ளலாம். தீபாவளி தினத்தில் மட்டுமல்லாமல், மற்ற நேரங்களிலும் இந்த லேகியத்தை சாப்பிடலாம். இது உடல் செரிமானத்துக்கு உதவுவதோடு, வயிற்றில் அமில காரத்தினை சமநிலைப்படுத்துகிறது.


Top Post Ad

Below Post Ad