Type Here to Get Search Results !

ஐப்பசி மாத ராசிபலன்கள்

நன்றி‌: விகடன்
அக்டோபர் 18 முதல் நவம்பர் 16 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ஐப்பசி மாத ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’முருகப்ரியன்.


7-ல் சூரியன், புதன்; 7, 8-ல் சுக்கிரன்; 6-ல் செவ்வாய்; 8, 9-ல் குரு; 9-ல் சனி, கேது; 3-ல் ராகு


மேஷராசி அன்பர்களே!


அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய மாதம். அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடவும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும்.சிலருக்குப் பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு கவலை தரும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பழைய கடன்களைத் திருப்பிக் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சிலருக்கு ஷேர் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.


உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.


தொழில், வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். போட்டிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆனாலும், சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். வீண் அலைச்சலும் அதனால் மனச் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். வியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.


கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகளைப் பெறுவதற்குக் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். பெண் கலைஞர்கள் விஷயங்களில் தலையிடவேண்டாம். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.


மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். கஷ்டப்பட்டுப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.


குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.


அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 19, 20, 26, 27, 28, 29; நவம்பர் 3, 4, 5, 6, 7, 11, 12, 16


சந்திராஷ்டம நாள்கள்: அக்டோபர் 30, 31


பாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் அபிராமி அம்மை பதிகம் பாராயணம் செய்வது மிகவும் நன்மை தரும்.


பரிகாரம்: ஞாயிறு அன்று சூரியனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவதும், வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு அர்ச்சனை செய்வதும் நல்லது.


6-ல் சூரியன், புதன்; 6, 7-ல் சுக்கிரன்; 5-ல் செவ்வாய்; 7, 8-ல் குரு; 8-ல் சனி, கேது; 2-ல் ராகு


ரிஷபராசி அன்பர்களே!


குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படச் சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர்களுக்குச் சென்று சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவைப்படும்.


அலுவலகத்தில் சக ஊழியர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும்.


தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம்.


கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். சக கலைஞர்களைப் பற்றி பொது இடங்களில் விமர்சித்துப் பேசுவதைத் தவிர்க்கவும். கிடைக்கும் வாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்யவும்.


மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகள் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தோழியர்கள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 18, 21, 22, 23, 24, 25, 29, 30, 31; நவம்பர் 6, 7, 8, 9, 10, 13, 14, 15


சந்திராஷ்டம நாள்கள்: நவ: 1, 2


பாராயணத்துக்கு உரிய மந்திரம்: திருஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தைத் தினமும் பாராயணம் செய்வதன் மூலம் சிவபெருமான் அருளால் சிரமங்கள் குறையும்.


பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்குத் துளசிமாலை அணிவித்து அர்ச்சனை செய்வதும், செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலத்தில் துர்காதேவியை வழிபடுவதும் நல்லது.


5-ல் சூரியன், புதன்; 5, 6-ல் சுக்கிரன்; 4-ல் செவ்வாய்; 6, 7-ல் குரு; 7-ல் சனி, கேது; 1-ல் ராகு


மிதுனராசி அன்பர்களே!


திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாதப் பிற்பகுதியில் பெண்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். வழக்குகளில் பொறுமை அவசியம்.


அலுவலகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படுவதால், மனதில் சோர்வும், உடல் அசதியும் உண்டாகும். ஆனால், உயர் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பது ஆறுதல் தரும். சிலருக்கு திடீர் இட மாற்றம்,. பணிமாற்றம் ஏற்படக்கூடும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் இருக்காது.


தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். ஆனாலும், மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் – வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.


கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசி வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆண் கலைஞர்களுக்கு பெண் கலைஞர்களாலும், பெண் கலைஞர்களுக்கு ஆண் கலைஞர்களாலும் நன்மைகள் ஏற்படச் சாத்தியம் உள்ளது. மாதப் பிற்பகுதியில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


மாணவர்களுக்குப் பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்க வேண்டியது அவசியம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். சிலருக்கு வெளியூர் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண் களுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.


அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 19, 20, 22, 24, 25, 27, 30, 31; நவம்பர் 1, 2, 8, 9, 10, 11, 12, 14, 16


சந்திராஷ்டம நாள்கள்: நவ: 3, 4, 5


பாராயணத்துக்கு உரிய மந்திரம்: ‘குலம் தரும் செல்வம் தந்திடும்’ என்று தொடங்கும் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களை பாராயணம் செய்வது அளவற்ற நன்மைகளைத் தரும்.


பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுவதும், ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபடுவதும் நன்மை தரும்.


4-ல் சூரியன், புதன்; 4, 5-ல் சுக்கிரன்; 3-ல் செவ்வாய்; 5, 6-ல் குரு; 6-ல் சனி, கேது; 12-ல் ராகு


கடகராசி அன்பர்களே!


பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மனஉறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேரு வார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும் பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும். சகோதரர்களால் ஏற்பட்ட சங்கடங்களும் தொல்லைகளும் நீங்கும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். நீண்டநாள்களாகத் தடைப்பட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர்கள்.


அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும்.


தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்படச் சாத்தியமுள்ளது. சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம். அரசாங்க வகையில் கிடைக்கவேண்டிய அனுமதிகள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படலாம்.


கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.


மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் உங்கள் படிப்புக்குத் தேவையான உதவிகளைச் செய்துதருவார்கள்.


குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவரின் பாராட்டுகள் கிடைக்கும்.அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குச் சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும்.


அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 18, 21, 22, 23, 24, 27, 29; நவம்பர் 1, 2, 3, 4, 5, 10, 11, 12, 14, 15


சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர் 6, 7


பாராயணத்துக்கு உரிய மந்திரம்: ‘ஆலம்தான் உகந்து அமுது செய்தானை’ என்று தொடங்கும் சுந்தரரின் பதிகத்தைப் பாராயணம் செய்வது அளவற்ற நன்மைகளைத் தரும்.


பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் நாகதேவைதை வழிபாடும், பிரதோஷத்தன்று நந்திதேவருக்குக் காப்பரிசி நைவேத்தியம் செய்து வழிபடுவதும் நன்மை தரும்.


3-ல் சூரியன், புதன்; 3, 4-ல் சுக்கிரன்; 2-ல் செவ்வாய்; 4, 5-ல் குரு; 5-ல் சனி, கேது; 11-ல் ராகு


சிம்மராசி அன்பர்களே!


புதிய முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளைத் திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்க ளில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தையின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அவருடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். சிலருக்கு முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.


அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.


தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். பற்று வரவில் கவனம் தேவை.


கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். ரசிகர்களிடம் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். ஆனாலும் உடனே சுதாரித்துக்கொண்டு பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும்.


குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குப் பல வகைகளிலும் அனுகூலமான மாதம்.


அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 18, 19, 20, 24, 25, 28, 29, நவம்பர் 3, 4, 5, 6, 7, 9, 13, 14, 15, 16


சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர் 8, 9, 10


பாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் அல்லது கந்தகுரு கவசம் பாராயணம் செய்வது நன்மை தரும்.


பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி,அர்ச்சனை செய்வதும், ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபடுவதும் நல்லது.


2-ல் சூரியன், புதன்; 2, 3-ல் சுக்கிரன்; 1-ல் செவ்வாய்; 3, 4 -ல் குரு; 5-ல் சனி, கேது; 10-ல் ராகு


கன்னிராசி அன்பர்களே!


இந்த மாதம்அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு மன அமைதியை பாதிக்கக்கூடும். கூடுமா னவரை மற்றவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். ஆனால், புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் முடிவதில் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் சற்று கவனமாக இருக்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கக்கூடும். கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்வது அவசியம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாகப் பழகவும்.


அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.


தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடிய வாய்ப்பு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.


கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ரசிகர்களிடம் உங்கள் செல்வாக்கு கூடும். சிலருக்கு விருதுகளும் பட்டங்களும் கிடைக்கும்.


மாணர்களுக்குப் படிப்பில் இருந்த தேக்கநிலை மாறும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். ஆனாலும், நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.


குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.


அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 19, 20, 21, 22, 23, 25, 26, 27, 30, 31; நவம்பர் 1, 3, 4, 6, 7, 8, 9, 10, 14, 16


சந்திராஷ்டம நாள்கள்: நவம்பர் 11, 12


பாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் விநாயகர் அகவல் பாராயணம் செய்வது நன்மை தரும்.


பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.


1-ல் சூரியன், புதன்; 1, 2-ல் சுக்கிரன்; 12-ல் செவ்வாய்; 2, 3 -ல் குரு; 3-ல் சனி, கேது; 9-ல் ராகு


துலாராசி அன்பர்களே!


அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். ஆனாலும், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பேசவும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி அடைவீர்கள். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அலைச்சலும் அதிகப்படியான செலவுகளும் ஏற்படக்கூடும்.


அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனாலும், பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.


தொழில் மற்றும் வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம். ஷேர் மூலம் ஆதாயம் வரும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு தடைப்பட்ட வாய்ப்புகள் கைகூடி வரும். வருமானமும் அதிகரிக்கும். பாராட்டுகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.


மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம். பொழுதுபோக்கு களைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும்போது கூர்ந்து கவனிக்கவும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று சிரமம் இருக்கவே செய்யும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. கணவரின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைச்சுமை கூடுதலாக இருக்கும்.


அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 21, 22, 23, 24, 25, 27, 29, நவம்பர் 1, 2, 3, 6, 8, 9, 10, 11, 12


சந்திராஷ்டம நாள்கள்: அக்டோபர் 18, நவம்பர் 13, 14, 15


பாராயணத்துக்கு உரிய மந்திரம்: அப்பர் சுவாமிகளின் நமசிவாய பதிகத்தை தினமும் பாராயணம் செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.


பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானுக்கு நெய்தீபம் ஏற்றி, செம்பருத்தி மலரால் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.


12-ல் சூரியன், புதன்; 12, 1-ல் சுக்கிரன்; 11-ல் செவ்வாய்; 1, 2 -ல் குரு; 2-ல் சனி, கேது; 8-ல் ராகு


விருச்சிகராசி அன்பர்களே!


பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்கள் தலையிடுவதை அனுமதிக்க வேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் புண்ணியத் தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். வராது என்று நினைத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும்.


அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது.


தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.


கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் தடையின்றி கிடைக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.


மாணவர்களுக்குப் பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். கஷ்டப்பட்டு படித்தால்தான், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும். நண்பர்களிடம் பழகுவதில் கவனம் தேவை.


குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 18, 22, 24, 25, 26, 27, 30, 31, நவம்பர் 3, 4, 5, 9, 11, 12, 13, 14, 15


சந்திராஷ்டம நாள்கள்: அக்:19, 20 நவம்பர் 16


பாராயணத்துக்கு உரிய மந்திரம்: கந்தசஷ்டி கவசம், ஷண்முகக் கவசம் போன்ற முருகப் பெருமானின் துதிப்பாடல்களைப் பாராயணம் செய்யலாம்.


பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதும் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.


11-ல் சூரியன், புதன்; 11, 12-ல் சுக்கிரன்; 10 -ல் செவ்வாய்; 12, 1 -ல் குரு; 1-ல் சனி, கேது; 7-ல் ராகு


தனுசுராசி அன்பர்களே!


வெளிவட்டாரத்தில் இழந்த மதிப்பும் மரியாதையும் திரும்பக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். முயற்சிகள் சாதகமாக முடியும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தைவழி உறவுகள் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். கடன் தொல்லைகள் நீங்கும். சகோதரர்கள் மூலம் பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. இரவு நேரத்தில் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.


அலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும்.


தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.


கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். மற்ற கலைஞர்களிடம் அனுசரனையாக நடந்துகொள்வது நல்லது. உங்களைப் பற்றிய வதந்திகள் பரவினாலும், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.


மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 18, 19, 20, 26, 27, 28, 29, நவம்பர் 1, 2, 5, 6, 7, 12, 13, 14, 15, 16


சந்திராஷ்டம நாள்கள்: அக்:21, 22, 23


பாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் லலிதா நவரத்ன மாலை பாடல்களைப் பாராயணம் செய்யவும்.


பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவதும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடும் நன்மை தரும்.


10-ல் சூரியன், புதன்; 10, 11-ல் சுக்கிரன்; 9 -ல் செவ்வாய்; 11, 12 -ல் குரு; 12-ல் சனி, கேது; 6-ல் ராகு


மகரராசி அன்பர்களே!


பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின் போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். வீட்டில் காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கக்கூடும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக் கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.


அலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.


தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும், வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும்.


கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்குப் புதுப்புது வாய்ப்புகள் தேடி வரும். ஆனால், மாதப் பிற்பகுதியில் சக கலைஞர்களால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களைப் பற்றிய வதந்திகளும் பரவக்கூடும்.


மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது அவசியம். நண்பர்களால் படிப்புக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 19, 20, 21, 22, 23, 28, 29, 30, 31 நவம்பர் 1, 3, 4, 5, 8, 9, 10, 14, 16


சந்திராஷ்டம நாள்கள்: அக்டோபர் 24, 25


பாராயணத்துக்கு உரிய மந்திரம்: திருஞானசம்பந்தர் அருளிய, ‘மந்திரமாவது நீறு’ என்று தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.


பரிகாரம்: பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு வில்வதளத்தால் அர்ச்சனை செய்வதும், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி தளத்தால் அர்ச்சனை செய்வதும் நல்லது.


9-ல் சூரியன், புதன்; 9, 10 -ல் சுக்கிரன்; 8 -ல் செவ்வாய்; 10, 11 -ல் குரு; 11-ல் சனி, கேது; 5-ல் ராகு


கும்பராசி அன்பர்களே!


காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறக்கூடும். சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் நன்மைகள் ஏற்படக்கூடும். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். என்றாலும், உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். குடும்பத்தில் முக்கியமான விஷயங்களில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்ம சங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் முடிவதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன்வழியில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய கடன்களைத் தந்து முடித்து நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.


அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் சக ஊழியர்களின் உதவியால் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாறுதல் கிடைக்கும்.


தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடை பெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது. கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். சந்தேகங்களை அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமங்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 19, 21, 22, 23, 24, 25, 29, 30, 31 நவம்பர் 1, 2, 5, 6, 7, 11, 12


சந்திராஷ்டம நாள்கள்: அக்டோபர் 26, 27


பாராயணத்துக்கு உரிய மந்திரம்: ‘ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்’ என்று தொடங்கும் குலசேகர ஆழ்வாரின் பாசுரங்களைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.


பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி தளத்தால் அர்ச்சனை செய்வதும், பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.


8-ல் சூரியன், புதன்; 8, 9 -ல் சுக்கிரன்; 7 -ல் செவ்வாய்; 9, 10 -ல் குரு; 10-ல் சனி, கேது; 4-ல் ராகு


மீனராசி அன்பர்களே!


வாழ்க்கை வசதிகள் பெருகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்கக் காரியங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும். எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. உறவினர்களாலும் நண்பர் களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளி மாநிலங்களில் உள்ள புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.


உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவியாக இருப்பார்கள். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பற்று வரவில் கவனமாக இருக்கவும். பெரியஅளவில் கடன் தரவேண்டாம். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசித்தான் வசூலிக்கவேண்டி இருக்கும்.


கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், தீவிர முயற்சியின் பேரில் கிடைத்துவிடும். சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படக் கூடும். மாணவர்களுக்குப் படிப்பில் கூடுதல் ஆர்வம் உண்டாகும். புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள் வதில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புகுந்தவீட்டு உறவினர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர்: 18, 19, 21, 24, 25, 26, 27, 30, நவம்பர் 1, 2, 3, 4, 5, 9, 10, 13, 14, 15


சந்திராஷ்டம நாள்கள்: அக்டோபர் 28, 29


பாராயணத்துக்கு உரிய மந்திரம்: ‘முதுவாய் ஓரி கதற முதுகாட்டு எரி கொண்டு’ என்று தொடங்கும் சுந்தரர் அருளிய திருக்கச்சூர் பதிகம் பாராயணம் செய்ய அளவற்ற நன்மைகள் ஏற்படும்.


பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு முல்லமலர்களால் அர்ச்சனை செய்வதும், ஞாயிற்றுக்கிழமைகளில் சரபேஸ்வரரை வழிபடும் நன்மை தரும்.


Top Post Ad

Below Post Ad