Type Here to Get Search Results !

தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்கு இனி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்:

குடிசை மற்றும் விவசாயத்திற்கு விலக்கு 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது

தமிழகத்தில் புதிய மின்இணைப்புக்கு இனி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை வரும் 1ம் தேதி முதல் அமல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதில் குடிசை மற்றும் விவசாயத்திற்கு மட்டும் விலக்கு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் புதிய மின் இணைப்பு பெற, ஆங்காங்குள்ள மின் வாரியத்தின் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவிற்குள், புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது விதி.

ஆனால், பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்களுடன், உரிய கட்டணத்தை செலுத்தினாலும், மின் இணைப்பை வழங்காமல் ஊழியர்கள், மக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு தீர்வை ஏற்படுத்த மின்வாரியம் முயற்சித்தது. இதையடுத்து அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பிப்பதுடன் சேர்த்து இணையதளம் மூலமாகவும் புதிய இணைப்பிற்கு விண்ணப்பிக்கும் திட்டம் கடந்த 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் மூலம் பொதுமக்கள் புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் தேதி, வரிசை எண் போன்ற விவரங்கள், கம்ப்யூட்டரில் பதிவு ஆகும். எனவே, தேவை இல்லாமல், மக்களை அலைக்கழிக்க முடியாது.

விண்ணப்பம் அளித்த, 30 நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும். மின் இணைப்பு வழங்க, மின் கம்பம் அமைக்க வேண்டி இருந்தால் 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்றால் 90 நாட்கள் அவகாசம் உள்ளது.


இருப்பினும் பலரும் அலுவலகத்திற்கு நேரடியாக சென்றே விண்ணப்பித்து வந்தனர். இதனை ஒருசில அலுவலகத்தில் மீண்டும் தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தற்போது புதிய இணைப்புக்கு ஆன்லைன்முறையில் மட்டுமே விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஆன்லைன்முறையில் புதிய மின்இணைப்புக்கு விண்ணப்பிக்கும் திட்டம் கடந்த 5.8.2016ல் கொண்டுவரப்பட்டது.

இந்த எளிமையானமுறைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தொழிற்சாலை இணைப்புகளுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் முறை கடந்த 2019ம் ஆண்டுமுதல் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் இதர தாழ்வழுத்த மின்இணைப்புகளுக்கும் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் முறை வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதில் குடிசை மற்றும் விவசாயத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன்முறையில் விண்ணப்பிப்போர், மின்வாரியத்தின் விதிமுறைகளின்படி தங்களது தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதையடுத்து அனைத்து தலைமை பொறியாளர்களும், கண்காணிப்புபொறியாளர்களும் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அலுவலகங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பெற வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் என மின்வாரிய தலைமை அலுவலகம் கூறியுள்ளது.
விண்ணப்பதாரர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வரும்போது, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என விளக்கிக்கூற வேண்டும்.

ஆன்லைன்முறை குறித்த விளம்பரத்தை அனைத்து அலுவலகம், கட்டணம் வசூல் செய்யும் மையம், சப்-டிவிசன், மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் விளம்பரத்தட்டிகள், நோட்டீஸ் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். இதை கட்டாயமாக அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் மின்வாரியம் கூறியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
விழிப்புணர்வுக்கு ேகாரிக்கை மின்கட்டணத்தை கிரெடிட், டெபிட் கார்டில் செலுத்தும் வசதி உள்ளது. இதற்கான பிரத்யேக கருவி மின்வாரிய அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மக்கள் ரொக்கமாகவே பணம் செலுத்தி வருகின்றனர். எனவே அனைத்து அலுவலகங்களிலும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Top Post Ad

Below Post Ad