*விளையாடும் கண்ணா வினைதீர்க்க வருவாயா*

அதர்மத்தை அழித்தபின் தர்மத்தை நிலைநாட்ட
அவதாரமாய் வந்தவனே அன்புநிறை கண்ணா
அடியேனின் வேண்டுதலை அமைதியாகக் கேட்டு நீயும்
அருள் புரிய வேண்டும் துவாரகையின் மன்னா.

காளிந்தியில் மட்டுமல்ல பாரெல்லாம் காளீயனின்
விஷக்கிருமி பெருந்தொற்றாய் உயிரெடுத்துக் கொண்டிருக்க
ஆயர்பாடியில் நீயும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்
மாயைதான் என்னவென்றுப் புரியவில்லை கண்ணா.

ஓடியாடி விளையாடி ஊரெல்லாம் குதித்தாடி
நீயன்று மிகிழ்ந்திருந்தது போதுமா கண்ணா
இக்காலப் பிள்ளைகள் உன்னைப் போல் மகிழ்ச்சியாக
இருக்கும் நாள் எந்நாளோ கனிவாயா கண்ணா.

சொல்லொன்று செயலொன்று என்றே இருக்கின்றோர்
நம்பவைத்து ஏமாற்றி நட்டாற்றில் தள்ளுகின்றோர்
தானென்ற அகந்தையில் தவறாகப் பேசுகின்றோர்
வளர்ந்து விட்டார் அவர் தவறை உணர்த்தவா கண்ணா.

விளையாடும் கண்ணா வினைதீர்க்க வருவாயா
புரியாமல் இருப்பவர்க்கு நல்புத்தி தருவாயா
பாண்டவரை விட்டுவிட்டு எங்களையும் பார்ப்பாயா
பாஞ்சாலி போல் பலரின் அலறல்கள் கேட்பாயா.

குசேலர்கள் குறை தீர்த்தல் கடமையன்றோ கண்ணா
நல்லவை நடந்தேற அருள்வாய் மணிவண்ணா
நம்பிக்கையை இன்னும் இழக்கவில்லை கண்ணா
மாதவா கேசவா கிருஷ்ணா முகுந்தா.

*கிராத்தூரான்

Post a Comment

أحدث أقدم