Type Here to Get Search Results !

தீபாவளிக்கு மறுநாள் பகுதி நேர சூரிய கிரகணம் - ‘வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது’



வரும் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என்றும், சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானில் சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வு கிரகணம் எனப்படுகிறது. அப்போது வெகு தொலைவில் இருக்கும் சூரியனை அளவில் சிறிய சந்திரன் மறைப்பது போல தோன்றும். வரும் 25-ம் தேதி அதாவது தீபாவளிக்கு மறுநாள் பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என்று புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக் குறிப்பில், "பகுதி நேர சூரிய கிரகணம் 2022 அக். 25-ஆம் தேதி (1944 சக ஆண்டு கார்த்திகை மாதம் 3-ஆம் நாள்) நிகழும். இந்தியாவில் சூரிய அஸ்தமனத்துக்கு முன் தொடங்கும் சூரிய கிரகணத்தை பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும். அந்தமான் நிகோபார் தீவுகள், வடகிழக்கு இந்தியாவின் ஒருசில பகுதிகளில் கிரகணத்தை பார்க்க முடியாது. இந்த கிரகணம் சூரிய அஸ்தமனத்துக்கு பின்னர் முடிவடைகிறது. கிரகணம் முடிவடைவதை இந்தியாவில் காண முடியாது.

அதிகபட்சமாக கிரகணம் வடமேற்கு பகுதிகளில் சந்திரன் சூரியனை மறைக்கும் நிகழ்வு சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை தெரியும். நாட்டின் பிற பகுதிகளில் இது குறைவாகவே காணப்படும்.

கிரகணம் உச்சத்தில் இருக்கும் போது டெல்லி மற்றும் மும்பையில் சந்திரன் சூரியனை மறைப்பது முறையே 44 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை தெரியும். சென்னை மற்றும் கொல்கத்தாவில் கிரகணம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடம் மற்றும் 12 நிமிடங்களாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top Post Ad

Below Post Ad