Type Here to Get Search Results !

தேர்வெழுத மாணவர்கள் விரும்பவில்லை


"தேர்வெழுத மாணவர்கள் விரும்பவில்லை"

கொரொனாவிற்குப் பின்னான கல்விச் சூழல் அபாயகரமானதாக உள்ளது. மாணவர்களின் மனநிலை வகுப்பறைக்குள் அடைபடவோ தேர்வை எதிர்கொள்ளவோ ஒவ்வாமல் உள்ளது.
இந்தச் சூழலை சமாளிக்க ஆசிரியர்கள் திக்குமுக்காடி நிற்க வேண்டியுள்ளது.

மாணவனின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காய் வடிவேலு பாய்விரிக்கும் பாணியில் ஒன்றை சரி செய்தால் இன்னொன்று முடங்கிப் போகிறது.
கல்வியின் தேவை அற்றவர்களாக தங்களையறியாமலேயே தங்களை மாற்றிக் கொண்டு விட்டனர் மாண்வர்கள்.

ஆசிரியர்கள் மீதும் இதன் பொருட்டு ஒரு குற்றச்சாட்டை வைக்கலாம். ஏன் உங்களால் இதை சரிசெய்ய முடியவில்லை என! அவர்கள் மனம் இதனை சீரபடுத்துவதில் இறங்கினாலும் மதிபெண் எங்கே? பதிவேடுகள் எங்கே? நீங்கள் வேலை செய்ததற்கு ஆதாரம் எங்கே? போன்ற அச்சுறுத்தல்களால் தானுண்டு தன் பதிவேடு உண்டு என ஆசிரியர்கள் தங்களைச் சுருக்கிக் கொண்டார்கள்.

மாணவர்களுக்கு எந்த அளவிற்கு வகுப்பறை சுதந்திரத்தை வேண்டுகிறோமோ அதையும் விட அள்வில் பெரிதாக ஆசிரியர்களுக்கும் அச்சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.

ஒரு மாணவன் ஒரு பாடத்தை மூன்று நாள்களில் படிக்கிறான் என்றால் இன்னொருவன் நான்கு வரிகளுக்கு முன்று நாள்கள் எடுத்துக் கொள்வான். முன்னேறிக் கொண்டிருப்பவனை மேலும் நகர்த்த வேண்டும் மெல்ல வந்து கொண்டிருபவனுக்கும் கைகொடுத்துத் தூக்க வேண்டும்.

அவனின் வீட்டுச் சூழலையும் கையாண்டாக வேண்டும். சமூக உந்தலையும் சரிசெய்து தர வேண்டும். சைக்கிளில் காற்றைப் பிடுங்கி விட்டுக் கொண்டே இருந்த மாணவன் ஒருவனின் உளக்கூறுபாட்டை ஆராய்ந்த போது இன்ன சாதிப் பிள்ளைகள் சைக்கிளில் வரக்கூடாது என்கிறான். அவனின் சீழ்பிடித்த மன நிலையை சரிசெய்ய இரண்டு வகுப்பிற்கான நேரத்தைச் செலவிட்டோம். பாடம் முடிக்க ஓட வேண்டும்.

நன்கு மதிப்பெண்கள் எடுக்கக் கூடிய ஒருவன் நான்கு நாள்களாக வரவில்லையென தேடிச் சென்றதில் கல்லூரி மாண்வர்களின் சேர்க்கையில் பெண்கள் மீது ஈடுபாட்டோடு பள்ளிக்கு வர மறுத்தான். அவனைக் கெஞ்சி கூத்தாடி பள்ளிக்கு வர வைத்திருக்கிறோம்.

மாணவி ஒருவள் அடிக்கடி விடுப்பில் இருக்க அவளின் கதையை ஆராய்ந்ததில் தாயின் இரண்டாவது திருமணத்தின் பொருட்டு தன் தாய்க்குப் பிறந்துள்ள குழந்த்தையைப் பராமரித்துக் கொண்டிருந்தாள். அவளைத் தேற்றி வகுப்பறையில் வைத்திருக்கிறோம்.

தலைகீழாய் நின்றாலும் கூட்டல் கழித்தலுக்குக் கூட மனம் இறங்காத மாணவர்கள் இன்றளவும் உள்ளனர். இவையெல்லாம் கல்வியின் தேவை எள்ளளவும் புரியாத மன நிலை.

ஒரு நாளைக்கு நூறு ரூபாய்க் கிடைத்தால் போதும் என கிடைக்கும் வேலைக்குச் செல்லும் சோம்பலான பார்வை. சுருங்கிய குறிக்கோள்.

அனைத்தும் இலவசமாய்க் கிடைத்ததன் விளைவாய்க் கூட இருக்கலாம். புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கியபோது இருந்த பொறுப்பு இப்போது இல்லை.

ஆசிரியர்களை அலட்சியமாய் அணுக வைத்த ஊடகமும் அரசுகளும் இதற்கு முழு பொறுப்பையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

ஆசிரியர் மாணவர் உறவு என்பது ஒரு வழிப் பாதையல்ல. இன்னும் சொன்னால் ஒருதலைக் காதல் போல் ஒருவர் மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. கொடுப்பதை மனமுவந்து வாங்க வேண்டும். விருப்பமற்றவனுக்கு போதிப்பதெல்லாம் திணித்தலுக்குச் சமம். கற்றலைத் திணிக்கவே முடியாது. 

ஒன்பதாம் வகுப்பு வரை மதிப்பற்றுக் கிடக்கும் மதிப்பெண்களை திடீரென பத்தாவதில் பற்றிக் கொள்ளச் சொன்னால் அவன் அதற்கு தயாராவதற்குள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதி விடுகிறான். தத்தித் தாவி அதைத் தாண்டியவன் உயர்கல்வியில் இரண்டு மாதங்கள் கூட தாக்குப் பிடிப்பதில்லை.

மதிப்பெண்களைத்தான் கொண்டாடப் போகிறோம் எனில் அதை ஆறாம் வகுப்பிலிருந்தே ஆரம்பிப்போமே! மதிப்பெண்கள் வேண்டாம் எனில் பள்ளிகல்விக்கான ஒட்டு மொத்தக் காலத்திலும் அதைத் தேட வேண்டாம். அத்தனையும் கண்துடைப்பு. கற்றல் கற்பித்தல முழு நிறைவைப் பெற உண்மைச் சூழலை உடைத்துப் பேசுவோம்.

ஆசிரியர்களை மட்டுமே குறை சொல்லிக் கொண்டே இருந்தால் பெற்றோரையும் சமூகத்தையும் எந்த இடத்தில் வைக்கிறோம். பள்ளியில் மாணவனின் ஒட்டு மொத்த பாதுகாப்பிற்கு பள்ளி பொறுப்பேற்கிறது. அவனின் உளச்சிக்கலுக்குக் காரணமான பெற்றோரும் சமூகமும் எங்களை வேடிக்கை மட்டும் பார்க்குமா?

பெற்றோரை வாய்திறக்கச் சொல்ல வேண்டும். சமூகத்தின் மிருகப் பல்லைப் பிடுங்கிக் கொடுக்க வேண்டும்.  

மாணவனின் ஒட்டு மொத்த சிக்கலைத் தீர்த்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மீது கல்லெறிவதில் ஒரு பிடி வளர்ச்சியை இச்சமூகம் கண்டுவிடாது.

படித்ததில் பிடித்து பகிர்ந்தது 

Top Post Ad

Below Post Ad