Type Here to Get Search Results !

யாருக்கு வாக்களித்தோம் என்பதைப் பார்க்கும் ஒப்புகைச் சீட்டு: நாடாளுமன்ற தேர்தலில் 100% அமல்: தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தகவல்


2019- நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கும், வாக்கு சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை 100% அமைக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கும், வாக்கு சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை அமைக்க உத்தரவிடக்கோரி, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாக்கியராஜ் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

அவரது மனுவில், “மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, வாக்காளர்கள், யாருக்கு வாக்களித்தார்களோ, அந்த வாக்கை சரிபார்க்க வசதியாக, வாக்கு சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரம், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், 2013-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும், ஆறு ஆண்டுகளான நிலையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படவில்லை. 

தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில், ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் வாக்கு சரிபார்க்கும் இயந்திரம் நிறுவப்படுகிறது. இதை மாற்றி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த இயந்திரத்தை நிறுவக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய மனுவுக்கு சரியான பதில் அளிக்கவில்லை.” என புகார் தெரிவித்திருந்தார். 

கோவா சட்டமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த இயந்திரத்தை பயன்படுத்திய நிலையில், வரும் மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த இயந்திரத்தை பொருத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார். 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறு நடக்க ஒரு சதவீதம் மட்டுமே சாத்தியம் இருப்பதாகவும், சில தொகுதிகளில் ஒன்று முதல் 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்கள். 

அப்படி இருக்கும் போது, ஓட்டு ஒப்புகை சீட்டு இயந்திரத்தை ஒரு சதவீத தொகுதிகளில் கூட அமைக்கப்படவில்லை. என மனுதாரர் தரப்பில் குறை கூறப்பட்டது. தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த நடைமுறையை படிப்படியாக மேற்கொள்ளவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2017-ல் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் வர இருக்கும் மக்களவை தேர்தலில் நூறு சதவீதம் இந்த இயந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Top Post Ad

Below Post Ad