அது என்ன அடிப்படை(fundamental) உரிமைகள்?
ஒருவர் மானத்துடன் உயிர் வாழ என்னென்ன தேவையோ, அவையெல்லாம் ‘அடிப்படை’ உரிமைகள். எந்தத் தனி மனிதரோ, அமைப்போ, நிறுவனமோ, ஏன்… அரசாங்கமே கூட, இந்த உரிமைகளை மறுக்க முடியாது. இவற்றை ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதி செய்கிறது நமது சாசனம். ஆகவேதான், அரசமைப்பு சட்டத்தை, ‘உரிமைகளின் பாதுகாவலன்’ (Protector of Rights) என்கிறோம்.சரி. என்னென்ன உரிமைகளை நமது சாசனம், அடிப்படை உரிமைகளாக நமக்குத் தந்து இருக்கிறது…? முக்கியமானவற்றை மட்டும் பார்ப்போம்.
1. எல்லாருக்கும் சமமான சட்ட உரிமை. இந்த உரிமையை சட்டம், யாருக்கும் மறுக்காது.
*சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய காவல் பணி உயர் அலுவலர்களுக்கு ஓய்வூதியம் உண்டு எனில், சாதாரண அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் உண்டு.*
(பிரிவு / Article - 14) சட்டப்படியான எந்த உரிமையையும் யாருக்கும் யாரும் மறுக்க முடியாது.
2. யாரையும் சட்டம் பாகுபடுத்திப் பார்க்காது. சட்டத்தின் நேர் பார்வையில், எல்லாரும் ஒன்று. ஏழை, பணக்காரன், படித்தவர், படிக்காதவர், ஆண், பெண் உள்ளிட்ட எந்த வேறுபாடும் சட்டத்தின் முன் இல்லை. சாதி, மதம், இனம், மொழி போன்ற பாகுபாடுகளும் அறவே கிடையாது. (பிரிவு 15)
3. பொது வேலை (public employment) பெறுவதில் அனைவருக்கும் சம வாய்ப்பு. (பிரிவு 16)
4. தீண்டாமை ஒழிப்பு. எந்த வடிவத்தில் தீண்டாமை கடைப் பிடிக்கப் பட்டாலும், தடை செய்யப் படுகிறது; சட்டப்படி தண்டனைக்கு உரியது. (பிரிவு 17)
5. பேச்சு சுதந்திரம். பேச, ‘வெளிப்படுத்த’, ஆயுதங்கள் இன்றி அமைதியாக ஒன்று சேர, மன்றங்கள்/ அமைப்புகள் நடத்த, இந்தியாவுக்குள் எங்கும் சென்று வர, இந்தியாவுக்குள் எங்கும் வசிக்க – எல்லாக் குடிமகன்களுக்கும் உரிமை உண்டு. (பிரிவு 19) ஒரே குற்றத்துக்கு இரு முறை தண்டனை வழங்கப்பட மாட்டாது. (பிரிவு 20)
6. வாழ்வதற்கான, தனிநபர் சுதந்திரத்துக்கான உரிமை. (பிரிவு 21) ஆதார் அட்டைக்கு எதிராக, தனிநபர் உரிமை பறி போவதாகப் பேசுகிறார்கள் அல்லவா…? அவர்கள் சுட்டிக் காட்டுவது இந்தப் பிரிவைத்தான்.
7. கல்வி உரிமை. 6 முதல் 14 வயது வரை, அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வியை உறுதி செய்தல். (பிரிவு 21A) இது, 2002இல் கொண்டு வரப்பட்ட 86ஆவது திருத்தம்.
8. முகாந்திரமற்று யாரையும் கைது செய்வதைத் தடுக்கிறது சாசனம். (பிரிவு 22) கைதான 24 மணி நேரத்துக்கு உள்ளாக, நீதிபதி முன்பாக நிறுத்தப்பட வேண்டும்.
9. குழந்தைத் தொழிலாளர்கள் கூடாது என்கிறது பிரிவு 25.
10. வழிபட, பின்பற்ற - மத சுதந்திரம் வழங்குகிறது பிரிவு 25; கல்வி நிறுவனங்கள் நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள மத அமைப்புகளுக்கு அனுமதி வழங்குகிறது பிரிவு 26.
11. மொழி, மத சிறுபான்மையினரின் நலன்கள் பிரிவு 29. சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு பிரிவு 30.
12. இந்த சாசனம் தரும் உரிமைகள் மறுக்கப்படும் பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். பிரிவு 32.
தகவல் பகிர்வு: திரு.லாரன்ஸ்