Type Here to Get Search Results !

வாகா எல்லை பற்றி தெரியுமா உங்களுக்கு?


பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் வர்தமான் இன்று வாகா எல்லை வழியாக தாய் நாட்டுக்கு திரும்புகிறார். வாகா என்ற வார்த்தை இந்தியா மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு பகுதி. இந்தியா தன்னுடைய அமைி பேச்சுவார்த்தையை பாகிஸ்தானுடன் நடத்தும்போதெல்லாம் வாகா வழியாகத்தான் பல நல்ல விஷயங்கள் நடைபெறும். மேலும், லாகூரக்கும் இந்தியாவுக்கும் பேருந்து சேவை கூட வாகா வழியாக தொடங்கி வைக்கப்பட்ட வரலாறு உண்டு. ஆனால், இப்போது இரு நாடுகளுக்கு இடையே அமைதிக்கான எந்தச் சூழலும் இல்லாதபோது வாகா எல்லையை பற்றி கொஞ்சம் தெரிந்துக் கொள்ளலாம்.


இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரித்ஸர் நகருக்கும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகருக்கும் இடையில் அமைத்துள்ள ஒரு சிறிய கிராமம்தான் வாகா.பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் இங்குள்ள எல்லையே வாகா எல்லையாகும். 1947 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் தனியாக பிரிக்கப்பட்டபோது கிழக்கு வாகா இந்தியாவுக்கும் மேற்கு வாகா பாகிஸ்தான் நாட்டுக்கும் என வகுக்கப்பட்டது அதன்படியான ராட்கிளிஃப் கோடு இந்த கிராமத்தின் வழியாக செல்கின்றது.


இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தனித்தனியாக பிரிய முடிவு செய்தபோது இருநாட்டுக்கும் பொதுவான எல்லையை வகுப்பதில் இங்கிலாந்தைச் சேர்ந்த வழக்கறிஞரான சிரில் ராட்கிளிஃப் முக்கிய பங்காற்றினார். அவர் நினைவாகவே இந்த கோடு ராட்கிளிப்ஃ கோடு எனப்படுகிறது. இந்த வாகா எல்லை இந்தியாவின் அம்ரித்ஸரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவிலும் பாகிஸ்தானில் லாகூரில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.


இந்த எல்லையில் தினத்தோறும் இருநாட்டு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெறும். இந்த அணிவகுப்பை பார்ப்பதற்காக இருநாட்டு எல்லைகளிலும் ஏராளமான மக்கள் குவிவார்கள். தினமும் சூரிய அஸ்தமனத்துக்கு 2 மணி நேரங்கள் முன்பாக இந்த அணிவகுப்பு தொடங்கும். இதில் இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படைவீரர்களும் பாகிஸ்தான் வீரர்களும் கலந்துகொண்டு தங்களின் கம்பீரமான அணிவகுப்பை நடத்துவார்கள்.


இருநாட்டு எல்லையிலும் கூடியிருக்கும் மக்கள் தங்கள் நாட்டு வீரர்களில் அணிவகுப்பின் போது மகிழ்ச்சியாக பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்றும் ஜெய்ஹிந்த் என்றும் கோஷமிட்டு அவர்களை உற்சாகப்படுத்துவார்கள். அணிவகுப்பு முடிந்த பின்னர் தங்களது நாட்டின் கொடியை கம்பத்தில் இருந்து வீரர்கள் இறக்குவார்கள். பின்னர் இரு நாட்டு வீரர்களும் பரஸ்பரமாக கைகுலுக்கி கொள்வார்கள்.

Top Post Ad

Below Post Ad