Type Here to Get Search Results !

நாளை நிழல் இல்லா நாள்: புதுச்சேரியில் கண்டு ரசிக்க ஏற்பாடு






தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) நிழல் இல்லா நாள் வருவதையொட்டி, புதுச்சேரியில் அது குறித்த அறிவியல் நிகழ்வை கண்டு ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து புதுவை அறிவியல் இயக்கச் செயலர் நா.அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே சூரியன் நம் நேர் உச்சிக்கு வரும். ஓர் இடத்திலுள்ள பொருளின் நிழலின் நீளம் ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே "நிழல் இல்லா நாள்' என்கிறோம். புதுச்சேரியிலும், தமிழகத்தின் விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் நிழல் இல்லா நாளாக வரும் ஞாயிற்றுக்கிழமை இருக்கும். இந்த நிகழ்வு மீண்டும் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடைபெறும். மகர ரேகைக்கு 23.45 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.45 டிகிரி வடக்காகவும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிகழ்வைக் காண முடியும். 

பகல் 12 மணிக்குத்தான் பொருள்களின் நிழல் பூஜ்ஜியமாகும். இந்த நிகழ்வை நாம் தெரிந்துகொள்வதன் மூலம் நமது அட்சரேகையை நாமே கணக்கிட முடியும். மேலும், சூரியனின் உயரத்தையும் கணக்கிடலாம். நிழல் இல்லா நாள் குறித்த வானியல் நிகழ்வை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், புதுச்சேரி உப்பளம் பெத்தி செமினார் தொடக்கப் பள்ளி வளாகத்தில் செயல்விளக்க நிகழ்ச்சியை புதுவை அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கருத்தாளர்களாக பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் மதிவாணன், அறிவியல் இயக்க பொதுச் செயலர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் ஹேமாவதி உள்பட அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் பலர் பங்கேற்று விளக்கமளிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியைக் காண விரும்பும் பொதுமக்கள் அ.ஹேமாவதி (8825425745), ப.இரவிச்சந்திரன் (94427 86122) ஆகியோரை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Top Post Ad

Below Post Ad