Type Here to Get Search Results !

விவிபாட் ஒப்புகை சீட்டு குறித்து புகார் தெரிவிக்கும் வாக்காளர் பிழையை நிரூபிக்காவிட்டால் சிறை தண்டனை அல்லது அபராதம்: தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து வழக்கு

மக்களவைத் தேர்தலில் எல்லா வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் விவிபாட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு வாக்காளர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் விரும்பும் வேட்பாளருக்கான பட்டனை அழுத்தி வாக்கை செலுத்திய உடன் விவிபாட் இயந்திரத்தில் உள்ள திரையில் பதிவான வாக்கின் வேட்பாளர் பெயர், கட்சி சின்னம் ஆகியவை 7 விநாடிகள் தெரியும். இதைப் பார்த்து வாக்காளர் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இதில் ஏதாவது பிழை ஏற்பட்டு வாக்காளர், தான் வாக்களித்த வேட்பாளரைத் தவிர வேறு யாருக்காவது வாக்கு பதிவானதாக அறிந்தால் அதுபற்றி புகார் செய்யலாம்.

அதே நேரம் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில், வாக்குப் பதிவு இயந்திரத்தில் பிழை என்பதை மீண்டும் அந்த வாக்காளர் பட்டனை அழுத்தி நிரூபிக்க வேண்டும். பிழையை நிரூபிக்காவிட்டால் 6 மாதம் சிறை அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து அந்த வாக்காளருக்கு தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுனில் அஹ்யா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ‘‘பிழையை நிரூபிக்காவிட்டால் வாக்காளருக்கு சிறை என்றால் எந்த வாக்காளரும் அச்சம் காரணமாக வாக்குப்பதிவு இயந்திரத்தின் குறையை சொல்ல முன்வர மாட்டார்கள். தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்த மாறுபட்ட அணுகுமுறையும் புகார்கள் தெரிவிப்பதும் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். எனவே, வாக்காளருக்கு சிறை என்பதை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரியிருந்தார். இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


Top Post Ad

Below Post Ad