மத்திய அரசு கொண்டுவந்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு சுயநிதிப் பள்ளிகளில் 25 சதவிகித இடம் ஒதுக்கப்பட வேண்டும். இதனால் தனியார்ப் பள்ளிகளுக்கு ஏற்படும் இழப்பை, மாநில அரசே ஏற்றுக்கொண்டது. சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகள், இந்த 25 சதவிகித ஒதுக்கீட்டுக்கான பட்டியலில் இடம்பெறுவதில்லை. இந்நிலையில், இந்தக் கல்வியாண்டில் கடைசி விண்ணப்ப நாளான மே 18-க்கு முன்பாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு சுயநிதிப் பள்ளிகளில் ஒதுக்கப்படவேண்டிய 25 சதவிகித இடங்களுக்காக 97,000-க்கும் அதிகமான ஆர்.டி.இ விண்ணப்பங்கள் குவிந்துள்ளன
மாநிலம் முழுவதிலும் உள்ள தனியார்ப் பள்ளிகளில், ஒதுக்கப்பட வேண்டிய 1.21 லட்சம் குழந்தைகளுக்கான இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கப்பட்ட ஆன்லைன் பதிவுக்கான வலைதளத்தில் தொடர்ச்சியாகப் பெற்றோர் விண்ணப்பித்துவருகிறார்கள். கடந்த ஆண்டு 1.1 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த ஆண்டும் அதே அளவில் விண்ணப்பங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆர்.டி.இ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ஆதரவற்ற குழந்தைகள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் பிற நலிவடைந்த பிரிவுகளுக்குள் வரும் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட பிறகு, விண்ணப்பதாரர்கள் அதிகமாக இருந்து இடங்கள் குறைவாக இருந்தால், கணினி அடிப்படையிலான குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
``சில தனியார்ப் பள்ளிகளின் பெயர்கள் இந்தப் பட்டியலில் விடுபட்டிருக்கின்றன. ஆர்.டி.இ சேர்க்கை குறித்த விழிப்புணர்வும் பெரும்பாலான பெற்றோர்களுக்கு இல்லை. விண்ணப்பங்களுக்கான கடைசித் தேதியை நீட்டிக்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனத் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.
2017-2018ம் ஆண்டுக்கான அரசுத்தொகை, மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது. மற்ற பள்ளிகளுக்கு அரசு சார்பில் அளிக்கப்பட வேண்டிய தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ள தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகள் மற்றும் சில ஐ.சி.எஸ்.இ பள்ளிகளில், ஏறத்தாழ 10,000 இடங்களை ஆர்.டி.இ சட்டத்தின் கீழ் நிரப்ப வாய்ப்புள்ளபோதிலும், இந்தச் சட்டத்தின்படி சேர்க்கை மேற்கொள்வதற்கு இந்தப் பள்ளிகள் மறுத்துவருகின்றன.
சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகளின் இத்தகைய போக்கை கல்வியாளர்கள் கண்டிக்கும் வேளையில், கல்வி உரிமைச் சட்டம் சார்ந்த மற்ற கூறுகளும் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார் கல்வியாளர் வசந்தி தேவி.
``கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலே, பள்ளிக்கல்வித் துறையில் உள்ள குறைபாடுகளைக் களைய முடியும். ஆனால், அரசு அதை முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளதா? யார் வேண்டுமானாலும் பள்ளிகளைத் தொடங்குகிறார்கள். எந்த ஒரு விதிமுறையோ அல்லது தடுப்பு நடவடிக்கையோ இல்லாமல் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் உள்ளன. இங்குக் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள 25 சதவிகித இடஒதுக்கீட்டைப் பற்றி மட்டுமே பேசுகிறார்களே தவிர, மற்றவற்றைப் பற்றிப் பேசுவதில்லை. அந்தச் சட்டத்தில், ஒவ்வொரு பள்ளியும் எப்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறை மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த விதிமுறைகளைத் தனியார்ப் பள்ளிகளிலும் பின்பற்றுவதில்லை, அரசுப் பள்ளிகளிலும் பின்பற்றுவதில்லை. அந்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்தால் மட்டுமே பள்ளிக்கல்வித் துறை மேம்படும். அதனால் கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் வாயிலாகவே குறைபாடுகளை சரிசெய்ய முடியும் என்பதை அரசு உணரவேண்டும்" என்று தெரிவிக்கிறார் வசந்தி தேவி.