தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இம்மாத தொடக்கத்தில் இருந்தே விலை ஏற்றத்துடனே காணப்பட்டது.
இதில் வரலாறு காணாத வகையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 28 ஆயிரத்தை தாண்டியது. இது நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தங்கம் பவுனுக்கு ரூ.30 ஆயிரத்தை தொட்டுவிடும் என்று கருத்து நிலவியது.
அதன்பின் தங்கம் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டது. இதனால் விலை குறையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்தது.
இன்று தங்கம் பவுனுக்கு ரூ.29 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29 ஆயிரத்து 440 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.3,680 ஆக உள்ளது.
இம்மாதம் 1-ந்தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.26,480 ஆக இருந்தது. கடந்த 24 நாட்களில் பவுனுக்கு ரூ.2,960 உயர்ந்து இருக்கிறது.
தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தில் செல்வது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இது வரும் நாட்களில் தொடரும் பட்சத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.30 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 49,200 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.49,20-க்கு விற்கிறது.