Type Here to Get Search Results !

சிறுவர் முன் பெற்றோர் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!



குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் பெற்றோர்தான். அவர்களிடமிருந்தே தனது பழக்க வழக்கங்களை உருவாக்கிக்கொள்கின்றன குழந்தைகள். அதனால், பெற்றோர் தனதுகுழந்தைகளுக்குக் கூற வேண்டியதை, வாழ்ந்து காட்டினாலே போதும். இது, குழந்தை வளர்ப்பில் முதன்மையான அம்சம்.
பெற்றோர் கடைப்பிடிக்கும் நல்ல விஷயங்களைக் குழந்தை பின்பற்றும் பழக்கம் கெட்டவிஷயங்களிலும் தொடரும். எனவே, குழந்தைகள் முன் செய்யக்கூடாதவை குறித்த முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. ஏனெனில், குழந்தைகளால் நகர்த்த அல்லது தூக்க முடியாத பொருள்களை அவர்கள் முன் நகர்த்த, தூக்க முயலாதீர்கள் என்று கூறுகிறார்கள். எனவே, பெற்றோர் தங்கள் குழந்தையின் முன் செய்யக் கூடாத விஷயங்களில் முக்கியமான 10-ஐ மட்டும் பார்ப்போம்.

*1. சண்டை தவிர்:*

எவ்வளவு தீவிரமான விஷயமாக இருந்தாலும் குழந்தையின் முன் சண்டைப் போடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், சண்டை போடும்போது அதிக உணர்ச்சிவசப்பட்டு, தவறான வார்த்தைகளைக் கூறிவிடலாம். ஒருவர் மற்றவரை அடிக்கும் சூழலும் ஏற்படலாம். இவை எல்லாமே குழந்தையின் மனதில் ஆழப் பதிந்துவிடும். இது ஆரோக்கியமானதல்ல.

*2. பொய் :*

பொய் சொல்லாமல் ஒரு நாளை கடத்துவது என்பது முடியாது என்கிற நிலையில்தான் நாம் இருக்கிறோம். ஆனாலும், இயன்றவரை குழந்தைகளின் முன் பொய் பேசுவதைத் தவிர்க்கவும். நிறைவேற்ற முடிகிற வாக்குறுதிகளை மட்டுமே கொடுங்கள். வீண் ஆசைகளை உருவாக்கும் பொய்களைக் கூற வேண்டும்.

*3. புறம் பேசாதீர்:*

உங்கள் வீட்டிலுள்ளவரையோ உறவினரையோ புறம் பேசாதீர்கள். புறம் பேசினீர்கள் என்றால், அந்த நபர் பற்றிய உங்கள் குழந்தையின் மனநிலை மோசமாக மாறக்கூடும் அல்லது அவர் இல்லாதபோது வேறு விதமாகப் பேசும் உங்களைப் பற்றிய சித்திரம் உடையக்கூடும்.

*4. விதிகளை மீறாதீர்:*

சாலையில் செல்லும்போதோ அலுவலகத்துக்குச் செல்லும்போதோ அங்குள்ள விதிகளை மீறாதீர்கள். இது குழந்தைகளுக்கான அடிப்படைப் பண்புகளை உருவாக்குவதில் பிரதானமான இடம் பிடிப்பவை. எனவே கவனத்துடன் செயல்பட வேண்டும்.

*5. கேலி:*

ஒருவரின் நிறம், உயரம், குள்ளம், தோற்றம் போன்றவற்றைக் கேலி செய்யாதீர்கள். நீங்கள் கேலி செய்யும் குணத்தில் உங்கள் குழந்தைக்கு நண்பர்கள் இருக்கக்கூடும். நீங்கள் செய்யும் கேலிச் சொற்களை, தங்கள் நண்பர் மீதும் பிரயோகிக்கப் பழகிவிடுவர்.

*6. போதை :*

ஒருவேளை சிகரெட் அல்லது மது அருந்தும் பழக்கம் இருக்கும்பட்சத்தில் மறந்தும்கூடக் குழந்தையின் முன் அவற்றைச் செய்துவிடாதீர்கள். ஏன் என்பதை விளக்க வேண்டியதில்லை.

*7. சாதி, மதம்:*

ஒருவரின் தோற்றத்தைக் கேலிச் செய்யாமல் இருப்பதைப் போலவே, அவரின் சாதி, மதம் பார்த்து பிரிவினையோடு பழகாதீர்கள். அவர்களின் சாதி, மத அடையாளங்களை இழிவுப் படுத்தவும் செய்யாதீர்கள். இந்தப் பழக்கம் உங்கள் குழந்தை சமூகத்தில் இயங்குவதற்கு முக்கியமாகத் தேவைப்படும். நீங்கள் விதைக்கும் பாகுபாடு பார்க்காமைதான் பின்னாளில் குழந்தைகளின் குணத்தையே தீர்மானிக்கும்.

*8. உறவுகள் மீதான மதிப்பீடு:*

நாம் மதிக்கும் உறவுகள் மீதான மதிப்பீட்டைக் குலைக்கும் விதத்தில் நடந்துகொள்ளாதீர்கள். வீட்டில் உள்ள முதியவர்களை மதிக்காமல் நடந்துகொள்வதைப் பார்க்கும்போது அந்த முறையையே குழந்தைகளும் பின்பற்றுவார்கள். மேலும், உறவுகள் மீதான அன்பும் ஈர்ப்பும் குறைந்துவிடும்.

*9. டிவி:*

டிவியைப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டால்தான் உணவு உள்ளிறங்கும் நிலையில் பல குழந்தைகள் உள்ளனர். அந்தளவுக்கு டிவி அவர்களை ஈர்த்துவிட்டது. ஆனால், அவர்களோடு நீங்கள் சேர்ந்து டிவி பார்க்கும்போது மிகுந்த எச்சரிக்கையோடு இருங்கள். குழந்தைகளின் வயதுக்கு மீறிய நிகழ்ச்சிகளை, சேர்ந்து பார்க்காதீர்கள். அது எவ்வளவு முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தாலும்கூட.

*10. ஜங்க் ஃபுட்:*

உடலுக்கு ஒவ்வாத ஜங்க் ஃபுட் சாப்பிடக் கூடாது என்கிற அறிவுரையைக் குழந்தைகளுக்குச் சொல்வதோடு பெற்றோர் கடமை முடிந்துவிடுவதில்லை. நீங்களும் அவற்றைத் தவிர்க்க வேண்டும். அதுவும் குழந்தைகளின் முன் சாப்பிடவே கூடாது. ஒருநாள் தானே என்று நீங்கள் நினைக்கலாம். அந்த விதி தளர்த்தலையே குழந்தைகள் அடிக்கடி செய்ய வலியுறுத்துவர்.

🙎🏼‍♂🙎🏼‍♂🙎🏼‍♂🙎🏼‍♂🙎🏼‍♂🙎🏼‍♂🙎🏼‍♂🙎🏼‍♂


Top Post Ad

Below Post Ad