Type Here to Get Search Results !

50 சதவீத சார்பு செயலாளர் பணியிடங்கள் காலி: தலைமைச் செயலகத்தில் பணிகள் முடங்கும் அபாயம்


தலைமைச் செயலகத்தில் செயலாளர்களுக்கும், அரசுத் துறைகளின் பல்வேறு பிரிவுகளுக்கும் பாலமாக விளங்கும் சார்பு செயலாளர் பணியிடங்கள் 50 சதவீதம் காலியாக உள்ளன. இதனால், தமிழக அரசின் இதயமாகக் கருதப்படும் தலைமைச் செயலகத்தில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர், பிரிவு அலுவலர், சார்பு செயலாளர், துணைச் செயலாளர், இணைச் செயலாளர் என்ற நிலைகளில் பதவியிடங்கள் உள்ளன. இதில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு மூலமாக உதவிப் பிரிவு அலுவலர் பணியிடத்துக்கு பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அதேசமயம், டி.என்.பி.எஸ்.சி., மூலமாக தேர்வாகும் உதவியாளர்களும், தட்டச்சர் பணிக்கான தேர்வெழுதி அந்தப் பணியில் வருவோரில் குறிப்பிட்ட சதவீத அளவினரும் பதவி உயர்வுகள் மூலமாக உதவிப் பிரிவு அலுவலர், பிரிவு அலுவலர், சார்பு செயலாளர் என தங்களது பணிக் காலத்தில் நியமிக்கப்படுகின்றனர்.
சார்பு செயலாளர் பணி: பிரிவு அலுவலர் நிலையில் இருந்து சார்பு செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு அளிப்பதில் இப்போது எழுந்துள்ள சிக்கலால் தலைமைச் செயலகத்தில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பதவி உயர்வு சிக்கலுக்கான காரணங்கள் குறித்து தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியது:
தலைமைச் செயலகத்தில் சார்பு செயலாளர் பதவிகள் 280 உள்ளன. அவற்றில் 120-க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஒரு சார்பு செயலாளருக்கு நான்கு பிரிவுகள் மட்டுமே ஒதுக்கப்படும். ஆனால், இப்போது எட்டு பிரிவுகள் வரை ஒரு சார்பு செயலாளர் கவனிக்கிறார். காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதே இதற்குக் காரணம்.
இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கு தட்டச்சர்கள் தொடர்ந்த வழக்கும் ஒரு காரணம். கடந்த 1993-ஆம் ஆண்டில் தமிழக அரசின் முடிவுப்படி தட்டச்சர்களுக்கு மட்டுமே உதவியாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்படும் எனவும், உதவியாளர்கள் நேரடி நியமனம் செய்யப்பட மாட்டார்கள் எனவும் அறிவித்தது. இந்த முடிவில் பின்னர் மாற்றம் ஏற்பட்டு, டி.என்.பி.எஸ்.சி. மூலமாக உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இதற்கு உரிய விதிகளில் திருத்தம் செய்யப்படாமல் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறி, தேர்வினை எதிர்த்து தீர்ப்பாயத்திலும், பின்னர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பான வாத, பிரதிவாதங்கள் நீதிமன்றத்தில் நடந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வழக்கு காரணமாக பிரிவு அலுவலர் பணியிடத்தில் இருந்து சார்பு செயலாளராக யாருக்கும் பதவி உயர்வு அளிக்கப்படாமல் உள்ளது. சுமார் 50 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. இதனால், பணியிலுள்ள சார்பு செயலாளர்கள் கூடுதலான பணிச் சுமையுடன் பணிபுரிய வேண்டியுள்ளது. ஒரு சார்பு செயலாளர் 8 பிரிவுகளின் பணியுடன், நூற்றுக்கணக்கான கோப்புகளையும் மேலாண்மை செய்ய வேண்டியுள்ளது. எனவே, சார்பு செயலாளர் பதவி உயர்வுக்குத் தடையாகக் கூறப்படும் வழக்கினை விரைந்து முடித்து காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Top Post Ad

Below Post Ad