ஆன்லைன்' மூலமாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களுக்கு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேவைக் கட்டணம், மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. இன்று முதல் இது, அமலுக்கு வருகிறது.
ரயில்களுக்கான முன்பதிவை ஆன்லைன் மூலமாக செய்யும் வசதியை, ரயில்வேயின், ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு சேவை மற்றும் சுற்றுலா வாரியம் அளித்து வருகிறது. ஆன்லைன் மூலமாக செய்யப்படும், 'இ - டிக்கெட்' முன்பதிவுக்கு, 'ஏசி' வசதியில்லாத பெட்டிக்கு, 20 ரூபாயும், 'ஏசி' வசதி உள்ள பெட்டிக்கு, 40 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், இந்த சேவைக் கட்டணங்கள், மூன்று ஆண்டுகளுக்கு முன் விலக்கி கொள்ளப்பட்டன.
இதனால், ஐ.ஆர்.சி.டி.சி.,யின் வருவாய் குறைந்தது. அதையடுத்து, சேவைக்கட்டணங்களை மீண்டும் அறிமுகம் செய்ய, ஐ.ஆர்.சி..டி.சி.,க்கு, ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 'ஏசி' வசதி யில்லாத பெட்டிகளுக்கான டிக்கெட்களின் முன்பதிவுக்கு, 15 ரூபாயும்; முதல் வகுப்பு மற்றும் 'ஏசி' வசதி உள்ளபெட்டிகளுக்கான முன்பதிவுக்கு, 30 ரூபாயும் வசூலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இது, இன்று (செப்.,1) முதல்அமலுக்கு வருகிறது.