தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று தென்மாநிலங்களில் பரவியதால், அம்மாநிலங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
இதனால், தமிழகம், கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பூவிருந்தமல்லியில் 13 செ.மீ. மழையும், பாம்பனில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பெரும்பலான இடங்களில் மிதமான மழை பெய்யும். கன மழையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு இடைவெளி விட்டு மிதமான மழை தொடரும்.
மீனவர்களுக்கான அறிவுறுத்தல் என்னவென்றால், குமரி மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.