என் வங்கிக் கணக்கை ஆன்லைன் பேங்கிங் மூலமாகப் பயன்படுத்துகிறேன். மாதத்தில் சிலமுறை ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்துகிறேன். 'ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது காசோலை மூலமாகப் பணப் பரிவர்த்தனை செய்தால்தான் வங்கிக் கணக்கு உயிர்ப்புடனிருக்கும்' என்றும், 'இல்லையெனில் அது செயலற்ற கணக்காக (Dormant Account) ஆகிவிடும்' என்று நண்பர் கூறினார். இது உண்மையா? - ஆர்.ஸ்ரீகாந்தன், சென்னை.
ஜி.டி.கோபாலகிருஷ்ணன், வங்கி மேலாளர், இந்தியன் வங்கி:
"உங்கள் நண்பர் சொல்வது தவறு. நீங்கள் ஆன்லைன் மூலமாகப் பரிவர்த்தனை செய்தாலும் அது பரிவர்த்தனைக் கணக்கில்தான் வரும். வங்கி மூலமாகத்தான் நேரடியாகப் பரிவர்த்தனை செய்ய வேண்டுமென்று எந்தக் கட்டாயமும் இல்லை. அடுத்ததாக, இரண்டு ஆண்டுகளாக ஒரு வங்கிக் கணக்கில் எந்தவிதமான பணப் பரிமாற்றமும் இல்லாமல், அதிலுள்ள டெபாசிட்டுக்கு வட்டி மட்டுமே கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தால், அது 'செயலற்ற கணக்கு' என்று கருதப்படும். அதன் பிறகு, அந்த வங்கிக் கணக்கின் மூலம் ஏ.டி.எம் பயன்பாடு போன்றவற்றைச் செய்ய முடியாது. அப்படி செயலற்றக் கணக்காக மாறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அந்த வங்கிக் கணக்கு வைத்திருப்பவருக்கு அது குறித்தத் தகவல் அனுப்பப்படும். பத்து ஆண்டுகளுக்கு அந்த வங்கிக் கணக்கு பயன்படுத்தப்படாமல் இருந்தால், அதிலுள்ள தொகை அரசுக் கணக்குக்குச் சென்றுவிடும்."
*****
என் மகனின் கல்லூரிப் படிப்புக்காக வங்கியில் கல்விக் கடன் பெற்றிருக்கிறேன். பாடங்களில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெறாவிட்டால் அடுத்த ஆண்டுக்குக் கல்விக் கடன் கிடைக்காது என்கிறார்களே... உண்மையா? - சக்திவேல், சேலம்
ஆர்.செல்வமணி, உதவிப் பொது மேலாளர் (ஓய்வு), கனரா வங்கி:
"கல்விக் கடன் பெறும் மாணவர்களின் படிக்கும் திறனைத் தெரிந்துகொள்ள ஒவ்வோர் ஆண்டும் படிப்பு முடிந்ததும், மதிப்பெண் சான்றிதழைக் கேட்பார்கள். பாடங்களில் எதிலாவது தேர்ச்சி பெறாவிட்டால், அந்த மாணவனுக்குப் படிப்பின் மீது ஆர்வமில்லை என்று எடுத்துக்கொள்ளப்பட்டு, தொடர்ந்து கல்விக் கடனைத் தர மறுக்க வாய்ப்பிருக்கிறது. முதலாமாண்டில் படிப்பில் நல்லமுறையில் தேர்ச்சி பெறாவிட்டால் அந்த மாணவனால் மற்ற ஆண்டுகளிலும் நன்கு படிக்க இயலாமல் போகலாம். எனவே, அந்தக் கல்விக் கடன் வாராக்கடனாக மாற வாய்ப்பிருக்கிறது எனக் கருத்தில்கொள்ளப்பட்டு கல்விக் கடன் தர வங்கி மறுக்கக்கூடும்."
பொதுத்துறை வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறேன். முதலில் 10,000 ரூபாய் மாதத் தவணை செலுத்திவந்தேன். பின்னர் என் சம்பளம் உயர்ந்ததால், மாதத் தவணையை 14,000 ரூபாயாக உயர்த்தி, கடந்த மூன்றாண்டுகளாகச் செலுத்திவருகிறேன். இன்னும் ஆறு ஆண்டுகள் வீட்டுக் கடன் செலுத்த வேண்டும். தற்போது சம்பளம் குறைந்திருப்பதால், பழையபடி மாதத் தவணையை 10,000 ரூபாயாக மாற்றிக்கொள்ள அனுமதிப்பார்களா? - பிரகாஷ், முகநூல் வழியாக...
ஆர்.கணேசன், உதவிப் பொது மேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்:
"பொதுவாக வீட்டுக் கடன் தவணைத் தொகையை இரண்டு முறை மாற்றிக்கொள்ள வங்கிகளில் அனுமதிப்பார்கள். (இந்த எண்ணிக்கை வங்கிக்கு வங்கி மாறுபடக்கூடும்.) தற்போது நீங்கள் இரண்டாவது முறையாக மாதத் தவணையை மாற்றுவதற்குக் கேட்கிறீர்கள் என்பதால் அதற்குச் சம்மதிக்க வாய்ப்பிருக்கிறது. எனினும், நீங்கள் முறையாக, தொடர்ச்சியாகத் தவணைத் தொகையைச் செலுத்திவருகிறீர்களா என்பதையும் கணக்கில்கொள்வார்கள். மாதத் தவணை செலுத்துவதில் விடுதல்கள் இருந்தால், நீங்கள் கேட்டபடி மாற்றித்தருவது சந்தேகமே. அது குறித்து வங்கி மேலாளர்தான் முடிவெடுப்பார்."
*****
நான் பொதுத்துறை வங்கியில் ஏற்கெனவே இரண்டுமுறை வீட்டுக்கடன் பெற்று வீடு கட்டியிருக்கிறேன். வீட்டுக்கடனையும் முழுமையாகச் செலுத்திவிட்டேன். மூன்றாவது முறை அதே வங்கியில் வீட்டுக்கடன் பெற முடியாது என்கிறார்கள். உண்மையா? - கேசவன், மதுரை
ஜி.டி.கோபாலகிருஷ்ணன், வங்கி மேலாளர், இந்தியன் வங்கி:
"எத்தனைமுறை வேண்டுமானாலும் வாங்க லாம். ஏற்கெனவே வாங்கிய கடனை முறையாகத் திருப்பிச்செலுத்தியிருப்பது உங்கள்மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தவே செய்யும். வங்கிக் கடனைத் திருப்பிச்செலுத்தும் வருமானமும், பிற தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறதா என்பதே வீட்டுக்கடன் தரும்போது முக்கியமான விஷயமாகப் பார்ப்பார்கள்''.
நன்றி விகடன்