Type Here to Get Search Results !

முடியைப் பிளக்கும் ஏ.சி... சேர்த்து வைக்கும் கடுக்காய் !




நன்றாக முடி வளர ஆரம்பிக்கும் காலம் என்பதே டீன்-ஏஜ் பருவத்தில்தான். அதேபோல... அதிகமாக முடி உதிர ஆரம்பிப்பதும் இந்தப் பருவத்தில்தான். சத்தான உணவு, சரியான கூந்தல் பராமரிப்பு என்று அக்கறையோடு இல்லாவிட்டால் ஆறடி கூந்தல்கூட... அரையடிக்கும் குறைவாக வந்து நின்றுவிடும்.

கறிவேப்பிலையை துவையல், பொடி என்று உணவில் சேர்ப்பதன் மூலம், இரும்புச் சத்து உடலில் சேர்ந்து, முடியை வலுவாக்கும். 'எந்த உணவில் கறிவேப்பிலை இருந்தாலும், தூக்கி வீசாமல் சாப்பிடுவேன்' என்று முதலில் ஒரு சபதம் போடுங்கள்!

வாரத்துக்கு ஒருமுறை, ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் சீயக்காய், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து அலசும்போது கூந்தல் கருகருவென வளர ஆரம்பிக்கும். முடி செம்பட்டையாக இருந்தாலும் கருமையாக்கி கண்சிமிட்ட வைக்கும்.


முடி உதிர்வதை உடனடியாக கவனிக்காமல் விட்டால்... கடைசியில் தினம் தினம் 'திருப்பதி' போனது போல ஆகிவிடும் தலை! நல்ல முற்றிய தேங்காயின் துருவல் ஒரு கப் எடுத்து, அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ச்சுங்கள். எண்ணெய் தனியாக பிரிந்து வரும். இதுதான் கலப்படமில்லாத சுத்தமான தேங்காய் எண்ணெய். இதைத் தினமும் தலைக்கு தேய்த்து வந் தால், முடி உதிர்வது நின்று, வளர்ச்சியும் துரிதப்படும்.

இளவயதில் வரும் முடி கொட்டுதல், வழுக்கை, நரை போன்ற பாதிப்புகளிலிருந்து தப்பிக்க... 100 மில்லி தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் ஒரு கப் மருதாணி இலையைப் போட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். 2 நெல்லிக்காய், 2 பூந்திக் கொட்டையை அரைத்து, மருதாணி தண்ணீரில் கலந்து, வாரம் ஒரு முறை தலைக்கு பேக்’ போட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்து ஷாம்பூ (அ) சீயக்காயினால் அலசுங்கள்.

வாரத்துக்கு இரண்டு முறை சின்ன வெங்காயம் இரண்டுடன், தேங்காய் துண்டு இரண்டு சேர்த்து அரைத்து வழுக்கையின் மீது பூசுங்கள். பிறகு, கடலை மாவைத் தேய்த்து அலசினால், மீண்டும் முடி முளைக்க ஆரம்பிக்கும்.

ஸ்டெரெயிட்டனிங்’ (முடியை நேராக்குதல்) செய்வதால், முடியானது ஆறே மாதத்தில் சுருங்கி, வலுவிழந்துவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதைத் தடுக்க... கொதிக்கும் டீ டிகாஷனில் டர்க்கி டவலை நனைத்துப் பிழிந்து, தலை முழுவதும் ஒத்தடம் கொடுக்கலாம்.

ஏ.சி-யிலேயே இருப்பவர்களுக்கு கூந்தல் வறட்சி, நுனி முடி பிளவு போன்றவை ஏற்படும். ஓமம், சீரகம், உடைத்த கடுக்காய் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து விழுதாக அரைத்து அதனுடன் கடலைமாவு, பயத்த மாவு கலந்து தலைக்கு தேய்த்து அலசும் போது, இந்தப் பிரச்னைகள் தீரும்.


Top Post Ad

Below Post Ad