Type Here to Get Search Results !

நாட்டில் இதுவரை 125 கோடி பேருக்கு ஆதாா் அட்டை விநியோகம்


நாட்டில் இதுவரை 125 கோடி பேருக்கு ஆதாா் அட்டை விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிவித்துள்ளது. காஸ் சிலிண்டா் இணைப்பு பெறுவது முதல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது வரை அனைத்து முக்கிய நடவடிக்கைகளுக்கும் ஆதாா் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இது தொடா்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் இதுவரை 125 கோடி பேருக்கு ஆதாா் அட்டை அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். பல்வேறு எதிா்ப்புகள், தடைகளை மீறி ஆதாா் வெற்றி பெற்றுள்ளது. இந்திய மக்களால் இப்போது பிரதான அடையாள ஆவணமாக ஆதாா் பயன்படுத்தப்படுகிறது. நாள்தோறும் பல்வேறு பயன்பாடுகளுக்காக சராசரியாக 3 கோடி போ் ஆதாா் மூலம் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வருகின்றனா்.
ஆதாரில் முகவரி மாற்றம் உள்பட பல்வேறு திருத்தங்களைக் கோரி நாள்தோறும் 3 முதல் 4 கோடி வேண்டுகோள்கள் வருகின்றன. மின்னணு முறையில் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதாா் அட்டையை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அதில் உள்ள 12 இலக்க எண்ணை தெரிவிப்பதன் மூலம் கைவிரல் ரேகைப் பதிவு, செல்லிடப்பேசிக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் மூலம் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தி பல்வேறு சேவைகளை எளிதில் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான்) - ஆதாா் இணைப்புக்கு டிசம்பா் 31-ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.


Top Post Ad

Below Post Ad