Type Here to Get Search Results !

உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பெட்டிக்கு தீ வைத்து எரிப்பு : 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு

திருவள்ளூர், பாப்பரம்பாக்கம் பகுதியில் வாக்குப்பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டதால் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வாக்குப்பெட்டியை வெளியே எடுத்து வந்த மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துவிட்டு தப்பியோடி விட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் நடைபெற்ற முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு, பூண்டி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பூந்தமல்லி ஆகிய 8 ஒன்றியங்களில் 16 மாவட்ட கவுன்சிலர், 126 ஒன்றிய கவுன்சிலர், 298 ஊராட்சி தலைவர், 1,722 ஊராட்சி வார்டு உறுப்பினர் என 2,162 பதவிகளுக்கு முதற்கட்ட தேர்தல் 1,403 வாக்குச் சாவடிகளில் நடந்தது. தேர்தல் பணியில் 1,403 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 9,308 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார், தேர்தல் பார்வையாளர் ஞானசேகரன், மாவட்ட எஸ்.பி., அரவிந்தன் ஆகியோர், வாக்குச்சாவடிகளுக்கு சென்று, வாக்காளர்கள் வாக்களிப்பதை பார்வையிட்டனர்.மேலும், மிகவும் பதற்றமான 164 வாக்குச்சாவடிகளில், வெப்-கேமரா அமைக்கப்பட்டு நேரடியாக கண்காணிக்கப்பட்டது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில், காலை 6.45 மணிக்கே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர். காலை 9 மணிக்கு பிறகு, பெண்கள் அதிகளவில் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வந்திருந்தனர். இந்நிலையில் பாப்பரம்பாக்கம் பகுதியில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பெட்டியை மர்மநபர்கள் தீ வைத்து எரித்துவிட்டு தப்பியோடி விட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாப்பரம்பாக்கம் பகுதியில் வாக்குப்பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டதால் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Top Post Ad

Below Post Ad