Type Here to Get Search Results !

புத்தாண்டில் புதுக்குழப்பம் - 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்


பிறக்கப்போகிற புத்தாண்டு ஒரு அபூர்வ ஆண்டு ஆகும். முதல் இரண்டு இலக்கங்கள், அடுத்த இரண்டு இலக்கங்களாகவும் அமைந்துள்ளன. இதே போன்று இனி அமைவதற்கு இன்னும் 101 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் 2121 என்ற ஆண்டு வரும். இன்றைய அவசரமான உலகத்தில் எல்லாவற்றையும் சுருக்கமாகத்தான் நாம் சொல்ல வேண்டியதிருக்கிறது. உதாரணமாக 1-1-2020 என்ற புத்தாண்டு நாளை, 1-1-20 என்றுதான் நம்மில் பெரும்பாலானோர் குறிப்பிடுவோம். குறிப்பாக கையெழுத்திட்டு, தேதியை குறிப்பிடுகிறபோது இப்படி சுருக்கமாக குறிப்பிடுவது மரபாகவும் பின்பற்றப்படுகிறது. ஆனால் இந்த புத்தாண்டில் ஒரு புதிய குழப்பம் இருக்கிறது. சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றையோ, முக்கிய ஆவணங்களையோ எழுதுகிறபோது 2020 என்ற ஆண்டை 20 என சுருக்கமாக எழுதக்கூடாது. ஏனென்றால் 20-க்கு பின்னர் வசதிக்கேற்பவோ, தேவைக்கேற்பவோ (முறைகேடாக) 01 முதல் 19 வரை சேர்த்து விட முடியும், இதனால் ஆவண தேதி 20-ம் வருடம் என்பதை 2001-ம் வருடம் முதல் 2019-ம் வருடம் வரை மாற்றி விட முடியும். எனவே இந்த ஆண்டு முழுவதும் சிரமம் பாராமல் ஆண்டை 20 என சுருக்கமாக குறிப்பிடாமல் 2020 என முன்ஜாக்கிரதை உணர்வுடன் எழுதி பழகி விடுங்கள். இது பிரச்சினை வருவதற்கு முன்னரே தடுக்க உதவும். இதே போன்று எந்தவொரு ஆவணத்தையும் நீங்கள் வாங்கும்போதும் சரி 2020 என முழுமையாக ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளதா என பார்த்து வாங்குவது நல்லது. ஏனென்றால் நாளை அந்த ஆவணத்தை உங்களுக்கு எழுதித்தந்தவரே கூட 20 என நான் கொடுத்தேன், முறைகேடாக பின்னர் 2 இலக்கங்களை சேர்த்து வருடத்தை திருத்தி விட்டார் என குற்றம் சாட்ட முடியும். எனவே ஆவணங்களை எழுதிக்கொடுத்தாலும் சரி, எழுதி வாங்கினாலும் சரி இந்த ஆண்டு முழுவதும் 2020 என முழுமையாக குறிப்பிட்டு பழகுங்கள். கையெழுத்து போட்டு தேதியை குறிப்பிடுகிறபோதும் இதை பின்பற்றுவது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், சிறந்தது.


Top Post Ad

Below Post Ad