சூரியன், நிலவு, பூமி என மூன்றும் நேர் கோட்டில் இருக்கும் போது சூரிய வெளிச்சத்தை நிலவு மறைக்கிறது. பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை நிலவு மறைக்கும் காட்சி தென்படும். சூரியனை முழுவதுமாக நிலவு மறைத்தால் அதுதான் முழு சூரிய கிரகணம்.
அவ்வகையில் இந்த ஆண்டின் கடைசி கிரகணமாக, டிசம்பர் 26ஆம் தேதியன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு தோன்றுகிறது.
இதுபற்றி முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் கூறுகையில், ‘டிசம்பர் 26ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. காலை 8 மணியில் இருந்து 3 மணி நேரம் சூரிய கிரகரணம் தெரியும். கோவை தெளிவாகவும் சென்னையில் பகுதி அளவிலும் கிரகணம் தெரியும். அவினாசி, ஈரோடு, கரூர், சிவகங்கை உள்ளிட்ட10 இடங்களில் தெளிவான சூரிய கிரகணம் தெரியும்.
சூரிய கிரகணத்தை எப்போதும் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. கிரகணத்தின்போது உணவு உட்கொள்ளலாம், உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாது’ என்றார்.
சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காக, மாநிலம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் செய்துவருகிறது.