Type Here to Get Search Results !

மின்சார ரெயில்களில் புதிய டிக்கெட் முறை அறிமுகம் - 3 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம்



சென்னை, மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், வண்டலூர் பூங்கா உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், ஒரு சுற்றுலா நகரமாக சென்னை திகழ்கிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் வருகை தருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சென்னைக்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். சென்னைக்கு வரும் பல சுற்றுலா பயணிகள் மாநகர பஸ் மற்றும் மின்சார ரெயில்களில் ஏறி அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்கின்றனர். மாநகர பஸ்சில் செல்வோர் ஒவ்வொரு இடத்திலும் இறங்கி ஏறும் போது, டிக்கெட் எடுத்து செல்கின்றனர். பின்னர் மாநகர பஸ்சில் ஒரு நாள் முழுவதும் ஏறி சுற்றிப்பார்க்க 50 ரூபாய் கட்டணத்துடன் டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த டிக்கெட் இரவு 12 மணி வரை மட்டுமே செல்லுபடியாகும். தற்போது பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட காரணத்தால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்திய ரெயில்வே மும்பையில் கடந்த 2013-ம் ஆண்டு இது போன்று சுற்றுலா பயணிகள் மின்சார ரெயிலில் பயணிக்க, சுற்றுலா டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தியது. இதேபோல் தமிழகத்திலும் மின்சார ரெயில்களில் சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வகையில் டிக்கெட் வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால் அது எதுவும் சென்னையில் நடைமுறை படுத்தப்படவில்லை. இந்த நிலையில் தெற்கு ரெயில்வே சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகவும், சுற்றுலா பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் விதமாகவும் புதிய டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ஒரு நாள், 3 நாட்கள், 5 நாட்கள் என டிக்கெட்களை பெற்றுக்கொள்ள முடியும். அதில் முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு பெட்டிகளுக்கு தனித்தனியாகவும், குழந்தைகள், பெரியவர்களுக்கு தனித்தனியாகவும் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்கள் காலாவதி ஆகும் வரை எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் மின்சார ரெயிலில் பயணிக்க முடியும்.இந்த டிக்கெட்டுகளை ரெயிலில் பயணிக்கும் தேதியில் இருந்து 3 நாட்களுக்கு முன்னரே, ஒரு நாள், 3 நாட்கள், 5 நாட்கள் என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளலாம் (உதாரணமாக 24-ந் தேதி பயணிக்க வேண்டுமானால், 21-ந் தேதியே டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம்). நாள் முழுவதும் எந்த வண்டியிலும், எந்த ரெயில் நிலையத்திலும் இருந்து வேண்டுமானாலும் இந்த டிக்கெட்டை வைத்து மின்சார ரெயிலில் பயணம் செய்யலாம். இந்த டிக்கெட், பயணிக்கும் கடைசி நாளின் இரவு 11.59 மணி வரை மட்டுமே செல்லுபடியாகும். இந்த சுற்றுலா டிக்கெட்டில் யாருக்கும் எந்த சலுகையும் இல்லை. சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்து விட்டு பின் ரத்து செய்ய விரும்பினால், பயணம் செய்யும் முன்பே ரத்து செய்ய வேண்டும். டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் ரெயில்வே விதிப்படி ரூ.30 பிடித்தம் செய்யப்பட்டு, மீதி பணம் கொடுக்கப்படும். இந்த புதிய சுற்றுலா டிக்கெட் திட்டம் நேற்று முதல் சென்னையில் நடைமுறைக்கு வந்தது. பயணிகள் அனைத்து ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர்களிலும் இதனை பெற்றுக்கொள்ளலாம்.

Top Post Ad

Below Post Ad