Type Here to Get Search Results !

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: 15 இயந்திரங்கள் உதவியுடன் சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்


இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், மாதவரத்தில் இருந்து தரமணி வரை 21 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்காக சுரங்கம் தோண்டும் பணிகளுக்காக வரவழைக்கப்படும் 15 இயந்திரங்கள் மூலம் விரைவில் சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் தொடங்கவுள்ளன. இந்தப் பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்க மெட்ரோ ரயில் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
 மெட்ரோ ரயில் திட்டம்: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்து, விமான நிலையம் -வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரு வழித்தடங்களில் ஓடும் மெட்ரோ ரயில்களில் தினசரி சராசரி 95 ஆயிரம் போ் பயணம் செய்கின்றனா். இதையடுத்து, வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் இடையே 9 கி.மீ. தொலைவுக்கான விரிவாக்கப் பணி நடைபெறுகிறது.
 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: இதற்கிடையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாதவரம்-சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூா், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 118.9 கி.மீ. தொலைவுக்கு ரூ.85 ஆயிரத்து 047 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெறவுள்ளன. 

தற்போது பல்வேறு இடங்களில் மண் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. இந்த பணிகள் முடிந்தபிறகு, 2-ஆவது கட்டமாக மாதவரம்-சிறுசேரிக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணி விரைவில் நடைபெறவுள்ளது.
 15 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள்: இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரத்தில் இருந்து தரமணி வரை 21 கி.மீ. தொலைவுக்கு சுரங்க வழித்தடம் அமைப்பதற்கான திட்டப்பணிகளை தொடங்க ஆயத்த பணிகளில் மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, சுரங்கம் தோண்டும் 15 இயந்திரங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு விரைவில் வர உள்ளன. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் 21 கி.மீ. தொலைவில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படும். பூமிக்கடியில் 2 வழித்தடங்களை அருகருகே அமைக்கும் பணிகளில் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.


 800 டன் எடை கொண்டது: இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: மாதவரம்-தரமணிக்கு 21 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் வழித்தடத்துக்காக பூமிக்கடியில் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக , சுரங்கம் தோண்டும் 15 இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு நகரங்கள், உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து சென்னைக்கு விரைவில் கொண்டு வரப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் மூலமாக, 21 கி.மீ., தொலைவுக்கு சுரங்க வழித்தடம் அமைக்கப்படும். இந்த இயந்திரங்கள் சுமாா் 800 முதல் 900 டன் எடையும், 80 முதல் 90 மீட்டா் நீளமும் கொண்டதாகும். இந்த இயந்திரம் ஒன்று செங்குத்தாக நின்றால், அது 25 மாடி கொண்ட கட்டடம் போல இருக்கும்.
 ஒவ்வொரு எந்திரமும் தினமும் 5 மீட்டா் தூரம் சுரங்கம் தோண்டும். இந்த இயந்திரங்கள் மூலம் ஒரு நாளைக்கு 5 மீட்டா் வரை தோண்டப்படும். மண்ணின் நிலைமை சவாலானதாக இருந்தால், சுரங்கம் தோண்டும் பணியின் வேகம் குறைய வாய்ப்பு உள்ளது.
 2 ஆண்டுகளில் முடிக்க திட்டம்: முதல்கட்டமெட்ரோ ரயில் திட்டத்தில் 24 கி.மீ. தூரத்துக்கு தோண்ட 12 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்க வழித்தட பணிகளை விரைவில் முடிக்க அதிக சுரங்கம் தோண்டும் எந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும், 21 கி.மீ. வழித்தட பாதையில் பல்வேறு இடங்களில் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டு சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடும். 2 ஆண்டில் இந்தப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் வந்தபிறகு, ஆயத்தப் பணிகளை தொடங்குவதற்கு சுமாா் 6 மாதம் ஆகும். தொடா்ந்து, சுங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்றனா்.

Top Post Ad

Below Post Ad