சீனாவில் கொரோனா வைரஸ்:
பெய்ஜிங்,சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 723 ஆக உயர்ந்திருந்தது.
இந்தநிலையில் இன்று பலி எண்ணிக்கை 803ஐ தாண்டியுள்ளது. 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சீன அரசு செய்தி மீடியாவான ஷினுவா, டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில்,சீனாவின் ஹெனன் மாகாணத்தில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை ஒன்றின் வெளியே, பாதுகாப்பு உடைகள், முகமூடி அணிந்து கொண்டு நிற்கிறார். சில மீட்டர் தொலைவில் அவரது மகள் நிற்கிறார்.அப்போது, மகள் அழுது கொண்டே, "அம்மா நான் உங்களை இழந்து வாடுகிறேன், சீக்கிரம் வீட்டுக்கு வாருங்கள்" எனக்கூறுகிறார்.
அதற்கு நர்ஸ, மகளுக்கு கூறிய ஆறுதலில் "அம்மா பெரிய அரக்கனை எதிர்த்து போராடுகிறேன்.கொரோனா வைரசை தோற்கடித்த பின்னர் தான் வீடு வந்து சேர்வேன்" என்று கூறுகிறார் தொடர்ந்து, தனது கையை தூக்கி அணைப்பது போல் சைகை செய்தார்.
பதிலுக்கு, சற்று தொலைவில் இருந்த மகளும் அவ்வாறே செய்தார்.பின்னர், மகள் வீட்டில் இருந்து எடுத்து வந்த பாத்திரத்தை தரையில் வைத்துவிட்டு, அழுதபடியே செல்கிறார்.
பின்னர், அந்த நர்ஸ் வந்து, அதனை எடுத்து கொண்டு கையசைத்தபடி சென்றார். இதனை, சற்று தொலைவில் இருந்து சிறுமி அழுதபடியே பார்த்து கொண்டு நின்றார்.இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த ஏராளமானோர், உருக்கமான தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தாய்-மகள் இடையே நடந்த இந்த பாசப்போராட்டம் காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.