உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் பரவி வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும், பக்தர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க ஆந்திர மாநில அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் திருமலை- திருப்பதி தேவஸ்தானமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அலிபிரி பாத மண்டபம், ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை, திருப்பதி அலிபிரி சோதனைச்சாவடி ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு இலவச மருத்துவ கிசிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் யாருக்கேனும் காய்ச்சல், இருமல் இருந்தாலும் கொரோனா வைரஸ் நோய் அறிகுறி இருந்தாலும் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளது. 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருக்கும் பக்தர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதி அறைகளில் பக்தர்கள் ஓய்வெடுத்து அறையை காலி செய்த பின் துப்புரவு ஊழியர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு பிறகே அடுத்து வரும் பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், மத்திய வரவேற்பு மையம் ஆகிய இடங்களில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. திருப்பதி கோவிலில் அனைத்து தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மே மாதம் வரை இந்த ரத்து நீடிக்கும் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஆன்லைன் மூலம் ரூ.300 டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், அதை ரத்து செய்து விட்டு பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம். அவர்கள் மே மாதத்துக்கு பிறகு வந்து சாமி தரிசனம் செய்யலாம். மேலும் ரூ.300 டிக்கெட் தரிசன முன்பதிவு தேதியை மாற்றிக் கொள்ளலாம். வெளிநாடுகளில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏப்ரல் மாதம் 15-ந்தேதி வரை விசா வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் இந்தியாவிற்கு வந்து 28 நாட்களுக்கு மேல் இருந்தால் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் ஒரு காம்பார்ட்மெண்ட்டில் ஏற்கனவே 500 பக்தர்கள் தங்க வைக்கப்பட்டனர். தற்போது கொரோனா வைரஸ் நோய் எதிரொலியால் ஒரு கம்பார்ட்மெண்ட்டில் 250 பக்தர்கள் மட்டுமே தங்க வைக்கப்படுகின்றனர். கொரோனா பீதியால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. முன்பதிவு செய்தவர்களும் ரத்து செய்து வருகின்றனர். திருச்சானூரில் புதிதாக கட்டித்திறக்கப்பட்ட பத்மாவதி நிலையம் தங்கும் விடுதி, திருப்பதி ரெயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளது. நெல்லூர் மாவட்டத்தில் சினிமா தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சினிமா தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன.