கொரோனா ஊரடங்கு, வைரஸ் தொற்று பரிசோதனை என பல்வேறு பரிசோதனைகள் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறபித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் கடுமையான இன்னல்களுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறபித்துள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதி முடிவடையும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக நீட்டிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே அரசு கொரோனா ஊரடங்கு நேரத்தில் செய்ய வேண்டிய உதவிகள், கொரோனா பரிசோதனைகளுக்கு வாங்கப்படும் பணம் என பல்வேறு வழக்குகள் அவசர மனுக்களாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் தொடர்பான விசாரணையை வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறபித்துள்ளது. அந்த உத்தரவில், “நாட்டில் இப்போதைய நேரத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள், பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைகளுக்குப் பணம் வசூலிக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான அரசு ஆணை உடனடியாக மத்திய அரசால் வெளியிடப்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் மையங்கள் இந்திய மருத்துவ கழகம் அல்லது உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொடர்பான பரிசோதனைகளுக்கு தனியார் மருத்துவமனைகளும், பரிசோதனை மையங்களும் ரூ. 4 ஆயிரத்து 500 தொடங்கி பல்லாயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்து வந்ததாக ஆதாரத்துடன் புகார்கள் மத்திய அரசுக்கு குவிந்தன. இதுத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதே வேளையில் இனியும் தனியார் பரிசோதனை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் அதை சீல் வைக்கும் வகையில் அரசு ஆணை வெளியிடும் என மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.