Type Here to Get Search Results !

கரோனா அச்சுறுத்தல்: வீரர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது ஐசிசி



கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் மீண்டும் தொடங்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
 சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் மீண்டும் தொடங்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது ஐசிசி. அதன் முக்கிய அம்சங்கள்:
 மைதானத்தில் நடுவர்களும் வீரர்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும். நடுவரிடம் தொப்பி, கண்ணாடி, துண்டு ஆகியவற்றை வீரர்கள் இனிமேல் தரக்கூடாது. சக வீரர்களிடமும் அவற்றைத் தர தடை செய்யப்படுகிறது.
 தங்களுடைய பொருள்களை வீரர்கள் ஓரிடத்தில் வைத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்படவேண்டும். பந்தைப் பந்துவீச்சாளரிடம் தரவேண்டிய பணி நடுவருக்கு உள்ளதால் அவர்கள் கையுறைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
 பயிற்சியின்போது சமூக இடைவெளியை வீரர்கள் பின்பற்றவேண்டும். இரு வீரர்களுக்கு இடையே 1.5 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும்.


 உடலோடு உரசி வெற்றியைக் கொண்டாடும் விதத்தை வீரர்கள் தவிர்க்க வேண்டும். அதேபோல தண்ணீர், குளிர்பான பாட்டில்கள், துண்டு மற்றும் கிரிக்கெட் உபகரணங்கள் ஆகியவற்றை அடுத்தவருடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
 கிரிக்கெட் பந்தை பளபளக்கச் செய்ய உமிழ்நீரை பயன்படுத்துவதால், வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்படும். இதனால் உமிழ்நீரைப் பயன்படுத்தி பளபளக்கச் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக வியர்வையைப் பயன்படுத்தி பந்தை பளபளக்கச் செய்யலாம்.
 பந்தைத் தொட்ட பிறகு கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பந்தைத் தொட்ட வீரர்கள் அவரவர் மூக்கு, கண்கள், வாய் ஆகிய உறுப்புகளைத் தொடக் கூடாது.
 நடுவர்களின் உடல்நலனிலும் அக்கறை செலுத்தவேண்டும். வீரர்களுடன் மிக அருகில் இருந்து அவர்கள் பணியாற்றக் கூடியவர்கள்.  
 விளையாட்டில் பங்கும் வீரர் யாருக்காவது கரோனா அறிகுறிகள் இருந்தாலோ அல்லது வைரஸ் தொற்று உறுதியானாலோ உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். இதையடுத்து இரு அணி வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Top Post Ad

Below Post Ad