கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை முதற்கட்ட வெற்றியை பெற்று உள்ளது என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள அதே நேரத்தில் இன்னொரு பக்கம் சீனாவின் இன்னொரு நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் இரண்டாம் கட்ட வெற்றியை பெற்று இருப்பதாக அறிவித்துள்ளது.
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து சோதனையில் உலக நாடுகள் படுவேகம் காட்டி வருகிறது. நாங்கள் மருந்து கண்டுபிடித்துவிட்டோம், மனித பயன்பாட்டிற்கு மருந்து வர போகிறது என்று ரஷ்யா ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இன்னொரு பக்கம் கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து இந்த சோதனையை செய்து வருகிறது. இதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை தற்போது வெற்றிபெற்றுள்ளது. இந்த மருந்துக்கு தற்போது AZD1222 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவிலும் இதேபோல் நான்கு முன்னணி நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் முன்னிலை வகித்து வருகிறது. சீனோவேக், கேன்சினோ ஆகிய நிறுவனங்கள் இதில் இறுதிக்கட்ட மனித சோதனையில் இருக்கிறது. சீனோவேக் நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் தனது மருந்தை மனிதர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் கேன்சினோ (CanSino) மருந்து நிறுவனம் தற்போது கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. அதன்படி தாங்கள் நடத்திய ஸ்டேஜ் 1 மற்றும் ஸ்டேஜ் 2 சோதனைகள் முடிவுகள் வந்துவிட்டது. இதில் நாங்கள் சோதனை செய்து வரும் கொரோனா தடுப்பு மருந்து வெற்றிபெற்றுள்ளது. கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை மக்கள் பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளது .
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் எப்படி தனது மருந்தை உருவாக்கியதோ, கிட்டதட்ட அதே முறையில் தற்போது சீனாவின் கேன்சினோ (CanSino) நிறுவனமும் தனது மருந்தை உருவாக்கி உள்ளது. அதன்படி ஒரு மட்டுப்படுத்தப்பட்ட காய்ச்சல் வைரஸை (அடினோவைரஸ் - adenovirus) எடுத்துக்கொண்டு அதை கொரோனா வைரஸ் போல மாற்றி, அதில் கொரோனா வைரசுக்கு இருக்கும் புரோட்டின் கூம்புகளை பொருத்தி உள்ளனர். ஜெனிட்டிக்கல் முறையில் இந்த மாற்றங்களை செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் போலவே மட்டுப்படுத்தப்பட்ட போலி வைரஸை உருவாக்கி அதன்மூலம் தடுப்பு மருந்தை உருவாக்கி அதை உடலில் செலுத்தி உள்ளனர். இந்த தடுப்பு மருந்து சோதனையில் போலி கொரோனா வைரசுக்கு எதிராக துரிதமாக உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி செயல்பட்டு, அதை தாக்கி அழித்து இருக்கிறது. சரியாக அந்த கூம்புகளை தாக்கி உள்ளது. அதே போல் எப்படி அதை அழித்தோம் என்பதையும் எதிர்ப்பு சக்தி செல்கள் நினைவில் வைத்து இருக்கிறது.
அதன்பின் இவர்கள் மீது உண்மையான கொரோனா வைரஸ் செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது, அவர்களுக்கு அந்த வைரஸ் தாக்குதல் ஏற்படவில்லை. தடுப்பு மருந்து மிக சிறப்பாக செயல்பட்டு, எதிர்ப்பு சக்தி செல்கள் உடனடியாக கொரோனா வைரசை அழித்து இருக்கிறது. கேன்சினோ (CanSino) போலவே ஆக்ஸ்போர்டும் இதேபோல் அடினோவைரஸ் மூலம்தான் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது.
மொத்தம் இரண்டாம் கட்ட சோதனையில் 508 பேர் மீது கேன்சினோ (CanSino) சோதனை செய்துள்ளது. இதில் 253 பேருக்கு தீவிர டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது . இந்த 508 பேரும் 28 நாட்களில் கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. மருந்து கொடுக்கப்பட்ட 91% சிறிய அளவில் கூட கொரோனா பாதிப்பிற்கு உள்ளாக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
இந்த நிலையில் மூன்றாம் கட்ட சோதனையை மேற்கொள்ள கேன்சினோ (CanSino) நிறுவனம் முடிவு செய்துள்ளது. மூன்றாம் கட்ட சோதனையை 1000 பேர் மீது செய்ய இருக்கிறார்கள். கொரோனா தடுப்பு மருந்தின் வீரியம் எத்தனை நாளுக்கு இருக்கிறது என்று மூன்றாம் கட்ட சோதனையை செய்ய உள்ளனர். உலகம் முழுக்க தற்போது கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரமான போட்டி நிகழ்ந்து வருகிறது.