Type Here to Get Search Results !

வருமானம் இல்லாத, குறைந்த பயணிகள் ஏறுகின்ற 6,000 ரயில்வே ஸ்டேஷனில் இனி ரயில்கள் நிற்காது: ஊரடங்குக்கு பின் அமல்படுத்த இந்திய ரயில்வே முடிவு


வருமானம் இல்லாத மற்றும் குறைந்த பயணிகள் மட்டும் ஏறுகின்ற கிட்டதிட்ட 6,000 ரயில்வே ஸ்டேஷனில் இனி ரயில்கள் நின்று செல்லாது. அதன்படி புதியதாக கால அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்குக்கு பின் அமல்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. 
கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வராததால் எந்த பொது போக்குவரத்தும் இல்லாத நிலையில், ரயில்வே நிர்வாகம் அடுத்த வேலையில் இறங்கியுள்ளது. அதாவது புதியதாக ரயில் போக்குவரத்து கால அட்டவணையை தயார் செய்கிறது. அதாவது, ‘பூஜ்ஜிய அடிப்படையிலான கால அட்டவணை’ தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வருமானமில்லாத மற்றும் குறைவான பயணிகள் குறிப்பிட்ட ரயில் நிறுத்தத்தில் ஏறுதல் இடங்களை அடையாளங் கண்டு, அந்த ரயில்களின் நிறுத்தங்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
இதன்மூலம் ரயில் சேவைகளின் 6,000-க்கும் மேற்பட்ட தேவையற்ற நிறுத்தங்கள் அகற்றப்படும் என்று கூறப்படுகிறது. பூஜ்ஜிய அடிப்படையிலான கால அட்டவணையானது ரயில் சேவைகளை விஞ்ஞான முறையில் செயல்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக சிறந்த வேகம் மற்றும் செயல்திறன் கிடைக்கும். ஊரடங்கு காலகட்டத்தில், ஐ.ஐ.டி-மும்பையின் உதவியுடன் இந்த கால அட்டவணையை உருவாக்கும் பணியை தேசிய டிரான்ஸ்போர்ட்டர் முடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயிலானது ஒரு நிறுத்தத்தில் நின்றால், குறைந்தபட்சம் 50 பேர் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் காரணமாக இருக்க வேண்டும் என்பதை அளவுகோலாக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே.யாதவ் கூறுகையில், ‘புதிய கால அட்டவணை அமலுக்கு வரும்பட்சத்தில், பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களுக்கு தனித்தனி பாதைகள் ஏற்படுத்தப்படும். 
சாதாரண ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும்போது புதிய கால அட்டவணை செயல்படுத்தப்படும். சில நிறுத்தங்கள் அகற்றப்பட்டாலும், அந்த நிறுத்தங்களில் பிற ரயில் சேவைகள் இருப்பதை தேசிய டிரான்ஸ்போர்ட்டர் உறுதி செய்யும். ஊரடங்கிற்கு பின் இந்திய ரயில்வே ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க தயாராக இருக்கிறது. ஏறத்தாழ 5,000 நீண்ட தூர ரயில் சேவைகள் புதியதாக கட்டமைக்கப்படும்’ என்றார்.
Source Tamil Murasu

Top Post Ad

Below Post Ad