திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், தேவஸ்தான ஊழியர்கள், போலீசார், சுகாதார பணியாளர்கள் உட்பட 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய ஏழுமலையான் கோவில் செயல் அலுவலர் அருண்குமார் சிங்கால் இதனை தெரிவித்துள்ளார். கொரோனா பாதித்தவர்களில் 402 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எஞ்சிய 338 பேர் பல்வேறு மருத்துவமனைகள், தனிமை முகாம்களில் சிகிச்சையில் உள்ளதாக அருண்குமார் சிங்கால் தெரிவித்திருக்கிறார். ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதத்தில் 2 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், அவர்கள் மூலம் உண்டியில் காணிக்கையாக கிடைத்த தொகை 16 கோடியே 69 லட்சம் ரூபாய் என்று அவர் தெரிவித்திருக்கிறார். நடப்பாண்டில் ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து இதுவரை முடிவெடிக்கப்படவில்லை என்று அருண்குமார் சிங்கால் கூறியுள்ளார். பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் பிரமோற்சவ விழாவை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு தளர்வு எவ்வாறு அரசுகள் அறிவிக்கப்படவுள்ளன என்பது பொறுத்து பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அருண்குமார் சிங்கால் கூறியுள்ளார்.