டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மற்றும் பணமில்லா பொருளாதாரம் போன்ற எலக்ட்ரானிக் முறை பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக நிதிச்சட்டம் 2019-ல் புதிய பிரிவு (269 எஸ்.யு) ஒன்றும் இணைக்கப்பட்டது. பின்னர் ரூபே கார்டு மற்றும் பீம் செயலி போன்றவற்றின் மூலமான பரிமாற்றங்களும் எலக்ட்ரானிக் முறையாக அறிவிக்கப்பட்டது.இந்த முறைகளில் நடைபெறும் பணப்பரிமாற்றங்களுக்கு வங்கிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன. இதனால் மக்கள் இத்தகைய பரிமாற்றங்களில் நாட்டம் கொள்ளவில்லை. எனவே இந்த பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் வங்கிகள் பிடித்த மேற்படி கட்டணங்களை திரும்ப அளிக்குமாறு வருமான வரித்துறை வங்கிகளை அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘வருமான வரிச்சட்டம் 1961-ன் 269 எஸ்.யு. பிரிவின் கிழ் வரையறுக்கப்பட்டு உள்ள எலக்ட்ரானிக் முறை பரிமாற்றங்களுக்கு கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் பிடிக்கப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்ப செலுத்துமாறு வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும் எதிர்காலத்திலும் இத்தகைய பரிமாற்றங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன’ என கூறப்பட்டு உள்ளது.