Type Here to Get Search Results !

துன்ப காலங்களில் கடவுள் - தினம் ஒரு குட்டிக்கதை - பால.ரமேஷ்.ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான்.

அது அவன் வாழ்க்கைப் பயணம்.

நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால் தடங்கள். அவனுக்கு ஆச்சரியம்.

சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை. சத்தமாகக் கேட்டான்.

"என்னுடன் வருவது யார்?"

"நான் கடவுள்" என்று அசரீரியாகப் பதில் வந்தது.

அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

'கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்'. பயணம் தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில் மறந்தான். 

சுகமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன. 

சிறிய பிரச்சினைகள் பெரிதாயின. துன்பமும் துக்கமும் அதிகமாயின. 

ஒரு கட்டத்தில் அவன் சமாளிக்க முடியாமல் தவித்த போது தான் அந்தக் கால் தடங்கள் நினைவு மறுபடி வந்தது. 

'கூட கடவுள் இருக்கும் போதே இவ்வளவு துன்பமா' என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன் கால் தடங்களைக் கவனித்தான். 

அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன. 

அவன் சுற்றி பின்னோக்கிப் பார்த்தான். அவன் கஷ்டகாலம் ஆரம்பித்த கணத்திலிருந்து 

ஒரே ஒரு ஜோடிக் கால் தடம் மட்டுமே தெரிந்தது. அவனுக்கு அழுகையாய் வந்தது. 

கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை அழுகையினூடே கேட்டான். 

"கடவுளே என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்தீர்கள், 
துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே இது நியாயமா?" 

கடவுளிடமிருந்து பதில் வந்தது. "மகனே, நான் உன்னைக் கைவிடவில்லை. 

உன் துன்ப காலத்தில் நீ பார்த்த காலடிச்சுவடுகள் உன்னுடையவை அல்ல. என்னுடையவை. 

இந்தக் கடின யாத்திரையில் நடக்க முடியாத உன்னைத் தூக்கிக் கொண்டு நான் தான் நிறைய தூரம் வந்துள்ளேன். 

அதனால் தான் நீ உன்னுடைய காலடி சுவடுகளைக் காண முடியவில்லை...." 

அந்த மனிதன் கண்களில் நன்றியுடன் வழிந்த கண்ணீர் நிற்க நிறைய நேரம் ஆயிற்று. 

குற்றம் காண்பதில் மனிதன் சமர்த்தன். அவனுக்கு அதற்கு நிறைய நேரம் தேவைப் படுவதில்லை. 

கஷ்ட காலங்களில் உறவும் நட்பும் காணாமல் போவது போல 

கடவுளின் அருளும் காணாமல் போவதாக அவன் என்ணுவதில் வியப்பில்லை. 

சுமைகள் கூடும் போது, இறக்கி வைக்க வழி தெரியாத போது இருக்கவே இருக்கிறார் கடவுள், 
அவனிடம் வசவுகள் வாங்கிக் கொள்ள. 

வந்த கஷ்டங்கள் நமக்குத் தெரியும். எத்தனையோ கஷ்டங்கள் வரவிருந்து, 

அவை இறையருளால் வராமல் தவிர்க்கப் பட்டிருக்கலாம். 

அவை நம் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகிறது. 

கடவுள் கணக்கு சொல்வதில்லை. 

எனவே எத்தனையோ உண்மைகள் நமக்குத் தெரியாமலேயே போய் விடுகின்றன. 

துன்பங்களும், சோதனைக் காலங்களும் வரும் போது நாம் ஒரு பெரிய உண்மையை மறந்து விடக் கூடாது. 

எதுவுமே காரணம் இல்லாமல் நம்மிடம் வருவதில்லை. 

அவற்றில் சில நாம் சம்பாதித்தவை. 

நம் முந்தைய செயல்களின் விளைவுகள். நாமே வர வழைத்தவற்றை நாம் சந்தித்தே ஆக வேண்டியுள்ளது. 

மறுப்பதும் எதிர்ப்பதும் நியாயமல்ல. மற்றவை நாம் வளர, பக்குவப்படத் தேவையான அனுபவங்கள். 

நாம் கற்க வேண்டிய பாடங்கள். அவற்றைக் கற்றறிந்த பின்னரே, 
அந்த சோதனைத் தீயில் பட்ட பின்னரே 
நாம் புடம் போட்ட தங்கமாய் மிளிரப் போகிறோம். 

அவை நம் வாழ்வில் வரா விட்டால் நாம் சோபிப்பதுமில்லை. 

கையால் மென்மையாக தடவிக் கொடுத்தே கல்லை சிலையாக முடியாது. 

இன்பங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தால் நாம் பக்குவம் அடைவதும் சாத்தியமல்ல. 

உளிக்கு கல்லின் மீது பகையில்லை. உளியடிகளைத் தாங்காத கல் அழகிய சிலையாவதில்லை. 

கடவுள் என்ற சிற்பி நம்மைச் செதுக்கும் போது அழகிய சிலையாகப் போகிறோம் என்ற உணர்வுடன் தாங்கிக் கொண்டால், இது அர்த்தமில்லாததல்ல என்று புரிந்து கொண்டால் அந்த அடிகளும் நமக்கு ஆனந்தமே. 

இன்னொரு விதமாகவும் சொல்லலாம். மருந்து கசக்கிறது என்று குழந்தை கதறியழுதால் தாய் விட்டு விட மாட்டாள். 

குழந்தை குணமாக வேண்டும் என்று அக்கறை அவளுக்கு அதிகமுண்டு. பலவந்தமாக மருந்தை குழந்தை வாயில் திணிக்கையில் 

குழந்தை தாயை ஒரு கொடுமைக்காரியாகக் கூட நினைக்கலாம். 

குழந்தை என்ன நினைக்கிறது என்பது தாயிற்கு முக்கியமல்ல. 

குழந்தை குணமாக வேண்டும் என்பதே தாயிற்கு முக்கியம். 

குழந்தைக்கு எது நல்லது என்பதை குழந்தையை விடத் தாய் நன்றாக அறிவாள்.

கடவுளும் அந்தத் தாயைப் போல் தான். 

இனி கஷ்ட காலங்கள் வரும் போது 
கடவுளை திட்டாதீர்கள். 

அவற்றைத் தாங்கும் சக்தியையும் அவற்றிலிருந்து கற்கும் புத்தியையும் மட்டுமே கடவுளிடம் வேண்டுங்கள். 

கஷ்ட காலங்களில் தைரியத்தையும் இழக்காதீர்கள். 

உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள் 

உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும். 

முடிவு கண்டிப்பாக இனிமையாகும் ,,,

Top Post Ad

Below Post Ad