தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.520 குறைந்த நிலையில் இன்றும் ரூ.320 குறைந்தது. இதனால் நகை வாங்குவோர் உற்சாகம் அடைந்துள்ளனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. கொரோனாவிற்கு முன்பு தங்கம் விலை பவுனுக்கு ரூ.32 ஆயிரம் என்ற நிலையில் இருந்தது. ஆனால் ஊரடங்கு காலத்தில் திடீரென வேகமாக உயர்ந்து ரூ.40 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு பவுன் ரூ.43,328 என்ற புதிய உச்சத்தை தொட்டு நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தாண்டுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. பலரும் முதலீடு செய்வது, தங்க இறக்குமதிக்கு கட்டுப்பாடு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்தது.
ஆனால் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு பிறகு தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக காணப்பட்டது. கடந்த 19ம் தேதி ஒரு பவுன் 39,664க்கு விற்கப்பட்டது. கடந்த 21ம்தேதி யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. ஒரு கிராம் 4,915க்கும், பவுன் 39,320க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த நாளும் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் 4,850க்கும், பவுனுக்கு ரூ.520 குறைந்து ஒரு பவுன் 38,800க்கு விற்கப்பட்டது. இந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுன் ரூ.864 அளவுக்கு குறைந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது. ஒரு பவுன் ரூ.38,480 ஆக குறைந்தது. தொடர்ந்து 3வது நாளாக தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்குவோரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 3 நாட்களில் பவுனுக்கு ரூ.992 குறைந்துள்ளது.