கரோனா நோய் பாதிப்பைக் கண்டறியும் கருவியை, அமெரிக்காவுடன் சென்னை ஐஐடி இணைந்து கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக சென்னை ஐஐடி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அமெரிக்காவும், இந்தியாவும் சேர்ந்து விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் புதுமைகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்க இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளையை நிறுவியது. இதன் மூலம், தற்போது அமெரிக்காவின் ரிகவ்ர் என்ற சுகாதார நிறுவனத்துடன் சென்னை ஐஐடி இணைந்து, கரோனா பரிசோதனை முடிவை உடனுக்குடன் தெரிவிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கருவியில், மனிதனின் உமிழ்நீர் சிறிதளவு செலுத்திய 5 நிமிஷங்களில், கரோனாவால் அந்த நபர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என தெரிந்து விடும். மேலும் இந்தக் கருவி, மிகக் குறைந்த செலவில் மிகத் துல்லியமாக கரோனா பரிசோதனை முடிவைத் தெரிவிக்கும் என்று சென்னை ஐஐடி-யின் உயிரி மருத்துவ பொறியியல் துறை நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இந்தக் கருவியின் செயல்பாட்டை நிரூபித்ததற்காக அமெரிக்க கவுன்சிலின் விருதும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தக் கருவியை பெரிய அளவில் சந்தைப்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அமெரிக்க நிறுவனமும், சென்னை ஐஐடி-யும் இணைந்து ஆலோசித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source Dinamani